Published : 05 Jan 2025 12:45 PM
Last Updated : 05 Jan 2025 12:45 PM
சென்னை: தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் திட்டத்தில் வழங்கப்பட்ட நவீன வாகனங்களின் செயல்பாட்டை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின், பணியாளர்களிடம் விவரங்களைக் கேட்டறிந்தார்.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த ஆண்டுகளில், மனித கழிவுகளை மனிதனே அகற்றும் அவல நிலையை மாற்றி, சென்னை பெருநகரில் உள்ள கழிவுநீர் அகற்றும் கட்டமைப்புகளின் இயக்குதல் மற்றும் பராமரித்தல் பணிகளை சென்னை குடிநீர் வாரியம் இயந்திரமயமாக்கியுள்ளது. இவ்வியந்திரங்களை இயக்குவதற்கும், கழிவுநீர் கட்டமைப்புகளை பராமரிப்பதற்கும் 728 நிரந்தர மற்றும் 1,489 ஒப்பந்த பணியாளர்கள் உள்ளனர்.
இப்பணியாளர்கள் பல ஆண்டுகாலமாக கழிவுநீர் கட்டமைப்புகளைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் வாரிசுதாரர்களும் இதே பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையை மாற்றவும் வாழ்வதாரத்தை மேம்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, சென்னை குடிநீர் வாரியம், தலித் இந்திய வர்த்தக மற்றும் தொழிற்சங்க அமைப்புடன் இணைந்து இவர்களை தொழில் முனைவோராக மாற்ற, முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், கடந்த 2023 பிப்.28-ம் தேதி ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, சென்னை குடிநீர் வாரியம், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் தூய்மைப் பணியின்போது உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களான 39 பேர், 48 தூய்மைப் பணியாளர்கள் மற்றும் வறுமைகோட்டுக்கு கீழ் உள்ள 126 ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு முன்னுரிமை கொடுத்து, 213 பேருக்கு நவீன இயந்திரங்கள் வழங்கி இவர்களை தொழில் முனைவோர்களாக மேம்படுத்த 2023 டிச.27-ம் தேதி பணி ஆணைகள் வழங்கப்பட்டன.
நவீன கழிவு நீரகற்று இயந்திரங்கள் பெற, அம்பேத்கர் முன்னோடி திட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 50 சதவீதம் மானியம் வழங்கி, 213 பேருக்கும் கடன் உதவி மற்றும் மானியம், கடந்தாண்டு மார்ச் 8-ம் தேதி முதல்வரால் வழங்கப்பட்டது. சென்னை குடிநீர் வாரியத்தில் இத்திட்டத்துக்காக ரூ.500.24 கோடி ஒதுக்கப்பட்டது.
தொடர்ந்து, கடந்தாண்டு டிச.6-ம் தேதி, தூய்மைப் பணியாளர்களுக்கு 213 நவீன கழிவுநீர் அகற்றும் வாகனங்களை வழங்கும் வகையில், முதற்கட்டமாக 100 பேருக்கு வாகனங்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
இந்நிலையில், சென்னை, தேனாம்பேட்டை மண்டலம், சீதாம்மாள் சாலையில், தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட நவீன கழிவுநீர் அகற்றும் வாகனங்களின் செயல்பாடுகளை முதல்வர் நேற்று பார்வையிட்டார். அதுதொடர்பான விவரங்களை தூய்மைப் பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.
மேலும், இயந்திரத்தை கையாள்வது, செலவினம், வருமானம், வாழ்வாதார உயர்வு குறித்தும் கேட்டறிந்தார். அப்போது, இவ்வாகனம் 50 சதவீத அரசு மானியத்துடன் வாங்கியுள்ளதால் எரிபொருள் உள்ளிட்ட பல்வேறு செலவினங்கள் போக மாதம் சுமார் ரூ.60 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை வருமானம் கிடைப்பதாகவும், இதனால் தங்கள் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும், பணி ஒதுக்கீடு தொடர்பாகவும் முதல்வர் கேட்டறிந்ததுடன், பணியையும் முதல்வர் பாராட்டினார்.
இந்நிகழ்வில், எம்எல்ஏ த.வேலு, துணைமேயர் மு.மகேஷ்குமார், நகராட்சி நிர்வாகத்துறை செயலர் தா.கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் டி.ஜி.வினய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT