Published : 05 Jan 2025 09:29 AM
Last Updated : 05 Jan 2025 09:29 AM
சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் விற்கப்படும் சிறை கைதிகள் தயாரித்த பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்களுக்கு வழக்கறிஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் தண்டனைக் கைதிகள் தயாரிக்கும் பல்வேறு பொருட்களுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அந்த வகையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நடமாடும் சிறைச் சந்தைக்கு வழக்கறிஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த சிறைச் சந்தையில் கைதிகளின் கை வண்ணத்தில் உருவான நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், இட்லி பொடி, பருப்புப் பொடி, கடலை மிட்டாய், ஊறுகாய், நொறுக்குத் தீனி வகைகள், மணம் கமழும் சோப் வகைகள், கார்பெட் மற்றும் பவர்லூம் பெட்ஷீட் வகைகள், செருப்பு, ஷூ வகைகள், ஆடவருக்கான சட்டை, பேன்ட்கள், லுங்கிகள், பெண்களுக்கான சுடிதார் ரகங்கள், நைட்டிகள், சுங்குடி சேலைகள், காட்டன் துண்டுகள், தலையணை உறைகள், லெதர் பெல்ட்டுகள், சணல் பேக்குகள் என பலதரப்பட்ட பொருட்கள் தரமாகவும், விலை குறைவாகவும் விற்கப்படுகிறது.
சென்னையில் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அரசு அலுவலகமாக உலா வரும் இந்த சிறைச் சந்தை, மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை தோறும் உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை விற்பனையில் ஈடுபட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
முதன்முதலாக நேற்று தனது விற்பனையைத் தொடங்கிய இந்த சிறைச் சந்தையில் விற்கப்படும் பொருட்களை வழக்கறிஞர்களும், உயர் நீதிமன்றத்துக்கு வருகை தந்த போலீஸார் மற்றும் பொதுமக்களும் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.
இதுதொடர்பாக சிறைத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது “கோவை சிங்காநல்லூர். சிவகங்கை மறவமங்கலம் பகுதியில் உள்ள புருசடை உடைப்பு மற்றும் சேலம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் அமைந்துள்ள திறந்தவெளி சிறைச்சாலைகளில் காய்கறிகள் மற்றும் எண்ணெய் வித்துகள், பருத்தி போன்றவை பயிரிடப்படுகின்றன. இந்த திறந்தவெளி சிறைகளில் இருந்து டன் கணக்கில் விளைபொருட்கள் நன்னடத்தை கைதிகள் மூலமாக விளைவிக்கப்பட்டு இதுபோன்ற சிறைச் சந்தைக்கு கொண்டு வரப்பட்டு விற்கப்படுகிறது.
குறிப்பாக வேலூர் சிறை கைதிகள் மூலமாக பெல்ட் மற்றும் காலணிகளும், மதுரை கைதிகளிடமிருந்து சுங்குடி சேலைகள், நைட்டி வகைகளும், கோவை சிறை கைதிகள் மூலமாக எண்ணெய் வகைகளும் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. திறந்தவெளி சிறைச்சாலைகளில் பணிபுரியும் கைதிகள் எத்தனை நாட்கள் அங்கு பணிபுரிகின்றனரோ அத்தனை நாட்கள் தண்டனை குறைப்பும் உண்டு என்பதால் கைதிகளும் ஆர்வமுடன் பணியாற்றி வருகின்றனர்.
அத்துடன் அவர்கள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் தொகை சிறை கைதிகளுக்கான சம்பளம் மற்றும் மறுவாழ்வுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதனால் ஏதோ ஒரு சூழல் காரணமாக குற்றம் செய்து தண்டனையை அனுபவித்து வரும் சிறை கைதிகள், மாதம்தோறும் குடும்பத்துக்கும் ஒரு கணிசமான தொகையை குடும்ப செலவுக்காக அனுப்பி வருகின்றனர்.
தண்டனைக்காலம் முடிந்து வெளியே செல்லும்போது, அவர்கள் கற்றுக்கொண்ட கைத்தொழில் நல்ல மனமாற்றத்தையும், வாழ்வாதாரத்தையும் அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கிறது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT