Published : 05 Jan 2025 03:58 AM
Last Updated : 05 Jan 2025 03:58 AM
விருதுநகர்: விருதுநகர் அருகே பொம்மையாபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். ஆலை உரிமையாளர்கள், மேலாளர், போர்மேன் உட்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார், 2 பேரை கைது செய்தனர்.
சிவகாசி அருகே ஆலமரத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவர், விருதுநகர் அருகே பொம்மையாபுரம் கிராமத்தில் சாய்நாத் ஃபயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இங்கு 80 அறைகள் உள்ளன. இதில் 40 அறைகளை சிவகாசி வனிதா ஃபயர் ஒர்க்ஸ் உரிமையாளர்களான சசிபாலனும் அவரது மனைவி நிரஞ்சனாதேவியும் குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகின்றனர்.
இரு நிர்வாகங்களின் கீழ் 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பேன்சி ரக பட்டாசுகளை உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று காலை 84 தொழிலாளர்கள் பணிக்கு வந்திருந்தனர். இரு நிர்வாகங்களை சேர்ந்த தொழிலாளர்கள் இணைந்து காலை 9.40 மணியளவில் பட்டாசு உற்பத்திக்கான ரசாயன கலவையை தயார் செய்து கொண்டிருந்தனர். அப்போது, உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மருந்து கலவை செய்யும் அறை, வேதிப்பொருள் அறை உட்பட 4 அறைகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமானது.
விருதுநகர், சிவகாசி, சாத்தூர் ஆகிய பகுதிகளிலிருந்து வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்து, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த விபத்தில் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சிவகுமார் (56), மீனாட்சிசுந்தரம் (46), குருந்தமடத்தைச் சேர்ந்த வேல்முருகன் (54), காமராஜ் (54), வீரார்பட்டியைச் சேர்ந்த கண்ணன் (54), செட்டிக்குறிச்சியைச் சேர்ந்த நாகராஜ் (37) ஆகிய 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். காயமடைந்த ஆவுடையாபுரத்தைச் சேர்ந்த முகமது சுதின் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சிவகாசியில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அலுவலக கிளையின் முதன்மை கட்டுப்பாட்டு அலுவலர் (பொ) கந்தசாமி தலைமையிலான பெசோ அதிகாரிகள் விபத்து நடந்த பட்டாசு ஆலையில் ஆய்வு செய்து, வேதிப்பொருள் மாதிரிகளை சேகரித்து சென்றனர். பட்டாசு ஆலையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
சாய்நாத் ஃபயர் ஒர்க்ஸ் உரிமையாளர் பாலாஜி, அதன் போர்மேன்கள் பிரகாஷ், பாண்டியராஜ், வனிதா ஃபயர் ஒர்க்ஸ் உரிமையாளர்கள் சசிபாலன், நிரஞ்சனா தேவி, அதன் போர்மேன் கணேசன், மேற்பார்வையாளர் சதீஷ்குமார் ஆகிய 7 பேர் மீது வச்சகாரப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் கணேசன், சதீஷ்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பட்டாசு ஆலை உரிமம் பெற்று நடத்தி வருபவர்கள், அதை முழுவதுமாகவோ, ஒரு பகுதியையோ குத்தகைக்கு விடக் கூடாது என்பது விதிமுறை. சாய்நாத் பட்டாசு ஆலையில் இந்த விதிமுறை மீறப்பட்டுள்ளது.
அதிக அளவிலான பட்டாசுகளை உற்பத்தி செய்யும் நோக்கில், ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக வெடிபொருள் கலவை தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும், அனுபவமில்லாத தொழிலாளர்களை ஆபத்தான பணிகளில் ஈடுபடுத்தியது, போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாதது, பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாதது உள்ளிட்ட காரணங்களால் விபத்து நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ரூ.4 லட்சம் நிதியுதவி: வெடி விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், காயமடைந்தவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவியும் வழங்க மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT