Published : 05 Jan 2025 12:56 AM
Last Updated : 05 Jan 2025 12:56 AM

தமிழகத்தில் பல்வேறு மாடல்கள் இருந்தாலும் இடதுசாரி மாடல்தான் சிறந்தது: கே.பாலகிருஷ்ணன்

தமிழகத்தில் பட்டா கேட்டு போராடினால், தொழிலாளர் உரிமைக்காக போராடினால் உடனடியாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்கின்றனர். தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை உள்ளதா என்ற சந்தேகம் நிலவுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது. தொடர்ந்து மாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் பாலபாரதி, ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநாட்டில் கட்சியின் அரசியல் தலைமைக் குழு ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் பேசியதாவது: இந்துத்துவ வகுப்புவாத சித்தாந்தத்தை பதிவு செய்யும் நோக்கில் பாஜகவினர் செயல்படுகின்றனர். பாஜக ஆளும் மாநிலங்களில் ஆர்எஸ்எஸ் கோட்பாடுகளை செயல்படுத்துகின்ற வகையிலேயே அதன் செயல்பாடுகள் உள்ளன.

மத அடிப்படையில் மக்களை பிரித்து அரசியல் செய்யும் பாஜக, மற்றொரு பக்கம் பெரும் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படும் அரசாக உள்ளது. இதனால் சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வு ஏற்படுகிறது. தமிழகத்தில் பாஜகவை தோற்கடிக்கவும், தனிமைப்படுத்தவுமே மார்க்சிஸ்ட் செயல்படுகிறது.

தவறான கொள்கைகளை மத்திய அரசு முன்னெடுக்கும் போது, தமிழகத்தில் அதற்கு எதிராக குரல் கொடுப்பதால் திமுகவுடன் மார்க்சிஸ்ட் உறுதுணையாக இருந்தது. அதே நேரத்தில் சாம்சங் நிறுவனத்தில் தொழிற்சங்கம் தொடங்க தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் இந்திய தொழிற்சங்கப் போராட்டத்தில் முத்திரை பதித்த போராட்டமாக இருந்தது. ஆனால், தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்ய திமுக அரசு மறத்து வருவது வேதனையாக உள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியது, "அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தை வைத்து பாஜக அரசியல் செய்ய நினைக்கிறது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் மட்டுமல்ல, நாட்டின் எந்த பகுதியிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நிகழும்போது அதற்கு எதிராக போராடும் இயக்கமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இருந்து வருகிறது.

பாஜக - ஆர்எஸ்எஸுக்கு எதிராக திமுகவுடன் இணைந்து நாங்கள் போராடி வருகிறோம். இந்தியா கூட்டணியில் இணைந்து பயணிக்கிறோம். அதே நேரத்தில் தமிழகத்தில் பட்டா கேட்டு போராடினால், தொழிலாளர்கள் உரிமைக்காக போராடினால் உடனடியாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்கின்றனர். தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை உள்ளதா என்ற கேள்வி எழுகிறது.

விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் மாநாட்டு பேரணிக்கு அனுமதி மறுத்து, கடைசி நேரத்தில் அனுமதி தந்தீர்கள். பின்னர் கட்சியின் நிர்வாகிகளை அழைத்து பேரணிக்கு அனுமதியில்லை என தெரிவிப்பது ஏன்? எதிர்க்கட்சியாக இருந்தாலும் அனைத்து கட்சிகளும் நடத்தும் போராட்டங்களுக்கு அனுமதியளிக்க வேண்டும். எதற்காக அஞ்சுகிறீர்கள்? இந்த நிலை மாற வேண்டும். தமிழகத்தில் பல்வேறு மாடல்கள் இருந்தாலும் இடதுசாரிகள் மாடல்தான் சிறந்தது என்றார்.

கூட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள் ஜி.ராமகிருஷ்ணன், உ. வாசுகி, மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், கட்சியின் மூத்த தலைவர் சௌந்தர்ராஜன் உள்ளிட்டோர் பேசினர். மாலையில் நடைபெற்ற பேரணிக்கு கடைசி நேரத்தில் காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், அதையும் மீறி ஆயிரக்கணக்கானோர் பேரணியை நடத்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x