Published : 05 Jan 2025 12:49 AM
Last Updated : 05 Jan 2025 12:49 AM
திருச்சி: நீதிபதிகளின் செயல்பாடு குறித்து நுகர்வோர் அமைப்புகள் கேள்வி எழுப்ப வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் வலியுறுத்தினார்.
தமிழ்நாடு உபயோகிப்பாளர் பாதுகாப்புக் குழுவின் பொன் விழா கருத்தரங்கம் திருச்சி கலையரங்கத்தில் நேற்று நடைபெற்றது. குழுவின் செயலாளர் புஷ்பவனம் தலைமை வகித்தார். தலைவர் செல்வகுமார் முன்னிலை வகித்தார்.
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, ஒடிசா உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி முரளிதர், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஸ்வரண் சிங் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
விழாவில் உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பேசியது: உயர் நீதிமன்ற நீதிபதிகள் பலர் பதவிக்கு வந்த உடன் படாடோபங்களை எதிர்பார்க்கின்றனர். நீதி வழங்கும் கடமை மீது போதிய கவனம் செலுத்துவதில்லை. என்னை கேட்டால் நீதிபதிகளுக்கு பிரத்யேக போலீஸ் பாதுகாப்பு தேவையில்லை. இதன் மூலம் மனித ஆற்றல் விரயம் செய்யப்படுகிறது. நீதிபதி என்பது தெய்வப் பணி என சிலர் கருதுகின்றனர். அதுவும் பிற பணிகளைபோல விமர்சனத்துக்குட்பட்ட பணிதான்.
நீதிபதியின் செயல்பாடு: ஒரு நீதிபதியின் செயல்பாட்டை, அவர் அளித்த வழக்குகளின் தீர்ப்புகளின் எண்ணிக்கையை வைத்து மதிப்பிட முடியாது. ஏனெனில் ஒவ்வொரு வழக்குக்கும் விசாரணை உள்ளிட்ட நீதிமன்ற நடைமுறைகளுக்கு குறிப்பிட்ட கால அவகாசம் தேவைப்படும். சில குற்ற வழக்குகளை விசாரிக்க மிக நீண்ட காலம் தேவைப்படும். சில நீதிபதிகள் இரவு வரை நீதிமன்றத்தில் பணிசெய்கின்றனர். ஓரிரு மணி நேரம் மட்டும் நீதிமன்றத்தில் செலவிடும் நீதிபதிகளும் உண்டு.
நீதிபதிகளுக்கும் பணி நேரம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். நீதிமன்ற நேரம் முடிவடையும் வரை நீதிமன்றத்தில் இருந்து பணி செய்ய வேண்டும். தவறு செய்யும் நீதிபதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் போல அவர்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் செயல்பாட்டை, தீர்ப்பை விமர்சிப்பது இந்தியாவில் மிகவும் குறைவு. இந்த போக்கு மாற வேண்டும். நீதிபதிகளின் செயல்பாட்டை, தீர்ப்பை விமர்சிக்கும் பணியை இதுபோன்ற நுகர்வோர் அமைப்புகள், அறிஞர்கள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேசினார்.
நேரலை நல்லது: ஒடிசா உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி முரளிதர் பேசியது: மாறிவரும் சூழலில் நீதிபதிகளின் செயல்பாடு கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை உணர்ந்து பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகளின்போது நீதிமன்றத்தின், நீதிபதியின், வழக்கறிஞர்களின் செயல்பாட்டை நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம் நேரலையில் எங்கோ ஒரு மூலையில் இருந்து பொதுமக்கள் கண்காணிக்கிறார்கள். இது மிகவும் நல்லது. ஆட்சியில் உள்ளவர்கள், அரசு துறையினரை கேள்வி எழுப்புவதுபோல நீதித்துறை மீதும் நுகர்வோர் அமைப்புகள் கேள்வி எழுப்ப வேண்டும். இவ்வாறுநீதிபதி முரளிதர் கூறினார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார், மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வே.சரவணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT