Published : 04 Jan 2025 10:31 PM
Last Updated : 04 Jan 2025 10:31 PM

கபிலனுக்கு பாரதியார் விருது, ரவிக்குமாருக்கு அம்பேத்கர் விருது - தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: 2024ம் ஆண்டுக்கான தமிழக அரசின் மகாகவி பாரதியார் விருதுக்கு கவிஞர் கபிலனும், டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு து.ரவிக்குமாரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “தமிழறிஞர்களை சிறப்பிக்கும் வகையில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 2025-ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருதுக்கு புலவர் மு.படிக்கராமு-வும், 2024ஆம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருதுக்கு எல்.கணேசனும், மகாகவி பாரதியார் விருதுக்கு கவிஞர் கபிலனும், பாவேந்தர் பாரதிதாசன் விருதுக்கு கவிஞர் பொன்.செல்வகணபதியும், தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருதுக்கு மருத்துவர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்தும், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது வே.மு.பொதியவெற்பனும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். விருது பெறும் விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் விருதுத் தொகையாக ரூ.2 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பிக்கப் படுவார்கள்.

மேலும், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2024ஆம் ஆண்டிற்கான தந்தை பெரியார் விருதுக்கு விடுதலை ராஜேந்திரனும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 2024 ஆம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு து.ரவிக்குமாரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். விருது பெறும் விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் விருதுத் தொகையாக ரூ.5 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பிக்கப் படுவார்கள்.

மேலும் முத்தமிழறிஞர் கலைஞர் விருதுக்கு, முத்து வாவாசி தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவ்விருது பெறும் விருதாளருக்கு விருதுத் தொகையாக ரூ.10 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பிக்கப்படுவார். இவ்விருதுகள் தமிழக முதல்வரால் திருவள்ளுவர் திருநாளான ஜன.15ம் தேதியன்று சென்னையில் வழங்கப்படவுள்ளன” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x