Published : 04 Jan 2025 09:37 PM
Last Updated : 04 Jan 2025 09:37 PM
விழுப்புரம்: ‘பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகளை தடுத்து நிறுத்துக. தமிழக குழந்தைகள் நல ஆணையத்துக்கு தலைவரை நியமித்திட வேண்டும்’ என்று உள்ளிட்ட தீர்மானங்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாடு வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த மூன்று நாள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் முக்கிய அம்சங்கள்: > வளங்கள் - வாழ்வாதாரங்களை பாதுகாப்போம். மதவெறியை வீழ்த்தி முற்போக்கு விழுமியங்களை முன்னெடுப்போம். பேரிடராக வளர்ந்து கொண்டிருக்கும் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். முன்னெடுக்கும் பாசிச அரசியலை தனிமைப்படுத்த வேண்டும் என்பதே நமது முக்கிய அரசியல் கடமை.
> நில உரிமையை பாதுகாத்திட மாநில அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
> மாநகராட்சி, நகராட்சியுடன் கிராமப்புற பஞ்சாயத்துகளை இணைக்கும் நடவடிக்கைகளை மக்கள் விருப்பத்துக்கு விரோதமாக மக்கள் கருத்தரியாமல் அரசு மேற்கொள்ள கூடாது.
> சிறு, குறு, நடுத்தர தொழில்களைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு மின் கட்டண உயர்வையும், நிலைக் கட்டணத்தையும் கைவிட வேண்டும். சிறு, குறு உற்பத்தியாளர்களுக்கு தேசிய வங்கிகளில் கடன் வழங்கப்படுவதை முன்னுரிமை அடிப்படையில் உறுதி செய்ய வேண்டும்.
> இலங்கை தமிழர்கள், இஸ்லாமியர்கள், மலையகத் தமிழர்கள் சமத்துவத்துடன் வாழவும், மாகணங்களுக்கான அதிகாரப் பரவலை உறுதி செய்திடுக.
> விபத்தில்லா பட்டாசு உற்பத்தி செய்ய தொழிற்சங்க பிரதிநிதிகளை உள்ளடக்கிய முத்தரப்பு குழு அமைத்து பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
> அரசியல் களத்தில் மட்டுமின்றி சமூக தளத்திலும் விஷமாக வளர்ந்து வரும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் மதவெறி சக்திகளை முற்றிலுமாக முறியடித்து, நம் நாட்டின் அரசியல், சமூக பண்பாட்டு விழுமியங்களை பாதுகாக்க போராடுவோம்.
> கச்சா எண்ணெய் விலை குறைந்தும் குறையாத பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை! மக்கள் வயிற்றில் அடித்துக் கொண்டிருக்கும் ஒன்றிய பாஜக அரசுக்கு கண்டனம்.
> மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்புத் திட்டத்தின் நோக்கங்களை குலைக்காமல் செம்மையாக செயல்படுத்திடுக.
> பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகளை தடுத்து நிறுத்துக. தமிழக குழந்தைகள் நல ஆணையத்துக்கு தலைவரை நியமித்திட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அறிவிக்கப்படாத அவசரநிலையா? - இந்த மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசும்போது, “அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தை வைத்து பாஜக அரசியல் செய்ய நினைக்கிறது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் மட்டுமல்ல, நாட்டின் எந்த பகுதியிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நிகழும்போது அதற்கு எதிராக போராடும் இயக்கமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இருந்து வருகிறது.
பாஜக - ஆர்எஸ்எஸுக்கு எதிராக திமுகவுடன் இணைந்து நாங்கள் போராடி வருகிறோம். இந்தியா கூட்டணியில் இணைந்து பயணிக்கிறோம். அதே நேரத்தில் தமிழகத்தில் பட்டா கேட்டு போராடினால், தொழிலாளர்கள் உரிமைக்காக போராடினால் உடனடியாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்கின்றனர். தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை உள்ளதா என்ற கேள்வி எழுகிறது.
விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் மாநாட்டு பேரணிக்கு அனுமதி மறுத்து, கடைசி நேரத்தில் அனுமதி தந்தீர்கள். பின்னர் கட்சியின் நிர்வாகிகளை அழைத்து பேரணிக்கு அனுமதியில்லை என தெரிவிப்பது ஏன்? எதிர்க்கட்சியாக இருந்தாலும் அனைத்து கட்சிகளும் நடத்தும் போராட்டங்களுக்கு அனுமதியளிக்க வேண்டும். எதற்காக அஞ்சுகிறீர்கள்? இந்த நிலை மாற வேண்டும். தமிழகத்தில் பல்வேறு மாடல்கள் இருந்தாலும் இடதுசாரிகள் மாடல்தான் சிறந்தது” என்றார்.
இந்த மாநாட்டில் கட்சியின் அரசியல் தலைமைக் குழு ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் பேசும்போது, “தவறான கொள்கைகளை மத்திய அரசு முன்னெடுக்கும் போது, தமிழகத்தில் அதற்கு எதிராக குரல் கொடுப்பதால் திமுகவுடன் மார்க்சிஸ்ட் உறுதுணையாக இருந்தது. அதே நேரத்தில் சாம்சங் நிறுவனத்தில் தொழிற்சங்கம் தொடங்க தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் இந்திய தொழிற்சங்கப் போராட்டத்தில் முத்திரை பதித்த போராட்டமாக இருந்தது. ஆனால், தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்ய திமுக அரசு மறத்து வருவது வேதனையாக உள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT