Published : 04 Jan 2025 07:03 PM
Last Updated : 04 Jan 2025 07:03 PM

“ஒவ்வொரு தடவையும் இதே கச்சேரி..!” - கேள்வி கேட்ட பெண்ணிடம் ஜோதிமணி எம்.பி ஆவேசம்

கரூர்: ‘பாலம் வரவில்லை’ என பெண் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, “ஒவ்வொரு தடவையும் இதே மாதிரி கச்சேரி ஆரம்பிக்காதீங்க” என்று என ஜோதிமணி எம்.பி. தெரிவித்தார்.

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கோடங்கிப்பட்டியில் இன்று (ஜன.4) செ.ஜோதிமணி எம்.பி. நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஜோதிமணியை வரவேற்று பெண்கள் ஆரத்தி எடுத்தனர். அப்போது ஆரத்தி எடுத்த பெண் ஒருவர், ‘கோடங்கிபட்டியில் கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மேம்பாலம் அமைக்கப்படும் என கூறுகிறீர்கள். ஆனால் இதுவரை பாலம் வரவில்லை. இதனால் பலர் விபத்தில் உயிரிழக்கின்றனர். எங்கள் வீட்டு குழந்தைகள் செல்ல பாதுகாப்பு இல்லை’ என கேள்வி எழுப்பினார். இதனால் சிறிது சலசலப்பு ஏற்பட்டது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக எம்.பி ஜோதிமணி, “ஒவ்வொரு முறையும் இதே மாதிரி கச்சேரியை ஆரம்பிக்காதீங்க. ஒவ்வொரு முறையும் அதே ஆட்களை செட் செய்து அனுப்புகின்றனர். ஆட்களை கூட மாற்றுவது இல்லை. அதற்கான வீடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது” என்றார். “கடந்த முறையும் இதையேதான் தெரிவித்தீர்கள்” என்றார். மற்றொரு பெண். அவர்களை கட்சியினர் சமாதானப்படுத்தியினர்.

அதன்பிறகு ஜோதிமணி நன்றி தெரிவித்து பேசியபோது, “6 சட்ட மன்றத் தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட வாக்குகள் குறையவில்லை. இன்னும் 25 நாட்களில் கோடங்கிபட்டியில் மேம்பால பணிகள் தொடங்கப்படும்” என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஜோதிமணி கூறும்போது, “திண்டுக்கல்லில் அண்ணாமலையின் அக்கா கணவருக்கு நெருக்கமானவர் வீட்டில் அமலாக்கத் துறை முதன் முறையாக சோதனை நடத்தி ரூ.13 கோடி கைப்பற்றி, ரூ.250 கோடி மதிப்பிலான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பினால், ஜோதிமணி, செந்தில் பாலாஜி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் எனக்கு சொந்தம் என்கிறார். அண்ணாமலைக்கு அவரது அக்காவின் கணவர் சிவகுமார் சொந்தகாரரா இல்லையா? அமலாக்கத் துறை வழி தவறி அங்கே போயிருக்கலாம். அந்த வழக்கு எப்படி நடைபெறுகிறது என்பதை பொறுத்துதான் அது குறித்து தெரிவிக்க முடியும். நரேந்திர மோடிக்கு எதிராக பேசும் மாநிலங்களில் அமலாக்கத்துறை நிரந்தரமாக தங்கியுள்ளது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x