Published : 04 Jan 2025 06:57 PM
Last Updated : 04 Jan 2025 06:57 PM
மதுரை: “இடைத்தேர்தல் என்றால் 3 ஆயிரம், 4 ஆயிரம், 5 ஆயிரம் என வாக்கு வாங்குவதற்கு பணம் கொடுக்கும் திமுக அரசு, பொங்கல் பண்டிகைக்கு ஏழை, எளிய மக்கள் மற்றும் சமீபத்தில் புயல் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்க ரூ.3 ஆயிரமாவது கொடுக்க வேண்டும்,” என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
மதுரையில் இன்று (ஜன.4) தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மதுரை முதல் கன்னியாகுமரி வரை 10 மாவட்டங்களைச் சேர்ந்த கட்சியினருக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் விழா தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “அண்ணா பல்கலை மாணவி பாலியல் சம்பவத்தில் தமிழக அரசு உண்மையை மூடி மறைக்க நினைத்தால் அது மக்களுக்கு செய்யக்கூடிய அநீதியாகும். ஜனநாயக முறையை கடைபிடித்து நியாயம் கேட்டு அமைதியான முறையில் போராட்டம் நடத்துபவர்களுக்கு அனுமதி கொடுப்பது அரசின் கடமை.
இடைத்தேர்தல் என்றால் 3 முதல் 5 ஆயிரம் ரூபாய் என வாக்கு வாங்குவதற்கு பணம் கொடுக்கும் திமுக அரசு, நியாயமாக பொங்கல் பண்டிகைக்கு ஏழை, எளிய மக்களுக்கும், சமீபத்தில் புயலால் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ரூ.3 ஆயிரம் ரூபாயாவது கொடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
அண்ணா பல்கலை. சம்பவத்தை கண்டித்து பாஜக மகளிரிணி போராட்டம் நடத்தியது. நடத்த வி டாமல் கைது செய்தார்கள். சென்ற முறை இடைத்தேர்தலில் வாக்காளர்களை பட்டியில் அடைத்ததபோல் பாஜக மகளிரை பட்டியில் அடைத்தார்கள். குறிப்பாக ஆடுகள் அடைத்து வைத்திருக்கும் பகுதியிலேயே அடைத்துவைத்தார்கள். திமுக அரசின் கூட்டணி கட்சியே திமுக அரசின் அடக்குமுறை, தவறுகளை நேரடியாக முதல்வருக்கு சுட்டிக்காட்டியிருப்பது திமுக அரசின் தவறான போக்கை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. காவல் துறை, எதிர்க்கட்சிகளின் நியாயமான கோரிக்கைகளை கண்மூடித்தனமாக நிராகரிப்பது ஜனநாயகத்தில் ஏற்புடையதல்ல.
சமீபகாலங்களில் மகளிர் நடத்தும் போராட்டங்களில் பெண்களின் மதிப்பை குறைக்கும் வகையில் காவல்துறை மூலம் தமிழக அரசு நடந்து கொள்கிறது. சென்னையில் பாமக மகளிரணி போராட்டத்தில் பசுமை தாயகம் தலைவர் ஆர்ப்பாட்டத்தில் கால்வைப்பதற்கு முன்பே கைது செய்வதும், மதுரையில் ஆட்டுப்பட்டியில் பெண்களை அடைப்பதும் பெண்களின் மதிப்பை குறைக்கும் செயல்.
அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்த சம்பவத்தில் முழுப் பூசணிக்காயை யாரும் மறைக்க முடியாது. உண்மை நிலை வெளிவரவேண்டும். இதுபோன்ற சமபவங்கள் இனிமேல் நடைபெறாத வகையில் தமிழக அரசு செயல்பட வேண்டும் என அரசு நினைத்தால் உண்மை நிலை வெளிவரும். சார், மோர் தயிர் வடை என எதுவாக இருந்தாலும், யாராக இருந்தாலும் காவல்துறை குற்றவாளிகளிடமிருந்து உண்மைகளை கக்க வைக்க வேண்டும். அப்போதுதான் பொதுமக்கள், பெற்றோர்களுக்கு அரசு மீது நம்பிக்கை ஏற்படும்.
இதையொட்டி தமாகா சார்பில் ஈரோட்டில் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளோம். இதை காவல்துறை ஒடுக்க நினைக்கிறது. பாலியல் பிரச்சினைகளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தனிநபர் ஒழுக்கம் தவறி மிருகத்தனமாக நடக்கின்றனர். இதுபோன்ற குற்றங்களில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், தூக்குத்தண்டனை நிறைவேற்றவேண்டும். அப்போதுதான் சமுதாயத்தில் மிருத்தனமாக செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு அச்சம் பயம் ஏற்படும்.
தமிழக காவல் துறை மீதும் அரசு மீதும் குற்றவாளிகளுக்கு அச்சம் இல்லை. அமைச்சர் உதவியாளரை தகாத வார்த்தைகளால் திட்டுவது போன்று திமுக ஆட்சியாளர்கள் பற்றி பட்டியல் போடலாம். ஆட்சிப்பொறுப்பில் உள்ளவர்கள் பொறுப்புக்கு ஏற்றவாறு நடந்து கொள்ள வேண்டும். டங்ஸ்டன் சுரங்கப் பிரச்சினை மக்களுக்கு பாதகமாக இருந்தால் அதை செயல்படுத்தக்கூடாது என நாடாளுமன்றத்தில் அதிமுக, தமாகா ஒத்த கருத்தோடு வலியுறுத்தினோம். மாநில அரசைத் தாண்டி மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக்கூடாது என வலியுறுத்தினோம்.
ஆனால் துரதிருஷ்டவசமாக தமிழக அரசு டங்ஸ்டன் சுரங்கத்துக்கான ஏலம் விடும் போது அமைதியாக வேடிக்கை பார்த்துவிட்டு, கடைசிநேரத்தில் எதிர்த்தது புதிராக இருந்தது. சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலைகளில் வெடிவிபத்துகள் வழக்கமாகி கொண்டிருக்கிறது. அதில் பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறுவதும், நிதி கொடுப்பதும் பழக்கமாகி விட்டது. இந்த நிலை மாறவேண்டும். வெடிவிபத்துகள் நடக்காத வண்ணம் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். விஷச் சாராயம் குடித்து உயிரிழப்போருக்கு ரூ.10 லட்சம் தரும்போது, ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி உயிரிழக்கும் வீரர்களுக்கு 20 லட்சம் கொடுக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT