Published : 04 Jan 2025 04:06 PM
Last Updated : 04 Jan 2025 04:06 PM
கோவை: சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல், டீசல் டேங்கர் லாரிகள் கவிழ்ந்து கசிவு ஏற்பட்டாலும் உடனடியாக வெடிக்காது. பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி அச்சம் கொள்ளாமல் மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் போதும் என பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் முன்னாள் பாதுகாப்பு பிரிவு அதிகாரி தெரிவித்தார்.
கோவை, இருகூர் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் பாதுகாப்பு பிரிவு முன்னாள் மேலாளர் எஸ்.பி.செந்தில்குமார் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் செய்தியாளரிடம் கூறியது: கோவையில் சமையல் எரிவாயு டேங்கர் லாரி கவிழ்ந்தது போன்ற சம்பவங்கள் நடைபெறும்போது மக்கள் முதலில் அச்சம் கொள்ள தேவையில்லை. ஏனென்றால் இதுபோன்ற டேங்கர் லாரிகளில் மூன்று அடுக்கு பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கும்.
டேங்கர் லாரி கவிழ்ந்தால் சுற்றுப்புற 500 மீட்டர் தொலைவுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட வேண்டும். வீட்டில் சமையல் எரிவாயு கசிந்தால் நாம் எத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கை பின்பற்றுவோமோ அதுபோலவே விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். தீப்பொறி ஏற்பட்டு விபரீதம் நிகழ்ந்து விடக்கூடாது என்பதற்காகவே பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
எரிவாயு டேங்கர் லாரி கவிழ்ந்து அல்லது கசிவு ஏற்பட்டு விபத்து நேரிட்டால் சுற்றுப்புற பகுதிகளில் ‘பிளாஷ் பாயின்ட்’ என்று சொல்லக்கூடிய சூழல் ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எந்த டேங்கர் லாரியும் கீழே விழுந்தவுடன் வெடிக்காது. சமையல் எரிவாயு டேங்கர் லாரி பகலில் வெயில் நேரத்தில் கவிழ்ந்தாலும், இரவில் கவிழ்ந்தாலும் தட்பவெப்பம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது.
கோவை மாவட்டத்தில் ஏற்கெனவே இதுபோன்ற சம்பவங்கள் கடந்த காலங்களில் நடந்துள்ளன. 2012-ம் ஆண்டு எல் அண்ட் டி புறவழிச்சாலையில் பெட்ரோல், டீசல் ஏற்றி சென்ற டேங்கர் லாரி சாலையோரம் கவிழ்ந்தது. இதிலும் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. கடந்த 2013-ம் ஆண்டு வேலந்தாவளம் பகுதியில் தோட்டம் அருகே பெட்ரோல், டீசல் டேங்கர் லாரி இரவு 8 மணியளவில் கவிழ்ந்தது. அவசர மீட்பு வாகனம் (இஆர்வி) கொண்டுவரப்பட்டு டேங்கரில் இருந்து மற்றொரு டேங்கருக்கு மாற்றி இரவு 11 மணியளவில் நிலைமை சீரடைந்தது.
பெட்ரோல், டீசல் டேங்கர் லாரி கவிழ்ந்த இடத்துக்கு மக்கள் செல்வதை தவிர்க்க வேண்டும். ஆர்வம் காரணமாக அருகே சென்று கேன்களில் அவற்றை பிடித்து செல்லும் நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது. பெட்ரோல், டீசல் டேங்கர் லாரிகளில் மூன்று கம்பார்ட்மென்ட் அமைக்கப்பட்டிருக்கும். பெட்ரோல், டீசல் மற்றும் எண்ணெய் ஆகிய பொருட்களை ஒரே டேங்கரில் கொண்டு செல்ல முடியும். 12 ஆயிரம் கிலோ லிட்டர் முதல் 24 ஆயிரம் கிலோ லிட்டர் வரை கொள்ளளவு வசதி கொண்ட டேங்கர் லாரிகள் உள்ளன.
கோவையில் இருகூர் பகுதியில் பெட்ரோல், டீசல் சேமிப்பு கிடங்கு, கணபதி பகுதியில் சமையல் எரிவாயு சேமிப்பு கிடங்கு செயல்படுகின்றன. அங்குள்ள டேங்கர் வாகனங்கள் அனைத்தும் போபாலில் உள்ள பேரிடர் மேலாண்மை இன்ஸ்டியூட் (டிஎம்ஐ) நிர்வாகத்திடம் 6 மாதங்களுக்கு ஒரு முறை உரிமத்தை புதுப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT