Last Updated : 04 Jan, 2025 03:38 PM

1  

Published : 04 Jan 2025 03:38 PM
Last Updated : 04 Jan 2025 03:38 PM

அவமரியாதைக்கும், அவதிக்கும் உள்ளாகும் பக்தர்கள்! - காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் சர்ச்சை

காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று ஏகாம்பரநாதர் கோயில். இந்த கோயில் பண்டைய சமய நூல்களில் திருக்கச்சியேகம்பம் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த கோயில் பஞ்ச பூதஸ்தலங்களில் மண் ஸ்தலம் ஆகும். தற்போது, தைப்பூசத்துக்காக மேல்மருவத்தூர் வரும் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநில பக்தர்கள், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்பவர்கள் என பலரும் வருவதால் ஏகாம்பரநாதர் கோயிலில் கூட்ட நெரிசல் அதிகரித்துள்ளது. ஏகாம்பரநாதரை நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசிக்க வேண்டியுள்ளது.

இந்நிலையில்தான், கோயிலில் இடைத்தரகர்கள் ஆதிக்கம் செலுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ரவுடிகள் சிலர் கோயில் ஊழியர்கள்போல் உள்ளே நுழைந்து கோயிலுக்கு வரும் பக்தர்களின் வருகையை ஒழங்குபடுத்துவதுபோல் அவர்களிடம் தகராறில் ஈடுபடுகின்றனர். பக்தர்களும் இவர்களை கோயில் ஊழியர்கள் என்றே நினைக்கின்றனர். இடையில் இவர்கள் சிலரிடம் பணம் பெற்றுக்கொண்டு அவர்களை வரிசையில் நிற்க வைக்காமல் தனியே உள்ளே அழைத்துச் செல்கின்றனர். இதுகுறித்து அங்கு யாரேனும் கேள்வி எழுப்பினால் அவர்களை தகாத வார்த்தைகளால் பேசுகின்றனர். இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மனம் நொந்து ஏகாம் பரநாதரை தரிசிக்க வேண்டிய சூழல் உள்ளது.

வரிசையை ஒழுங்குபடுத்த கோயில் ஊழியர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். கோயில் ஊழியர்கள் என்பது பக்தர்களுக்கு தெரியும் வகையில் அவர்களுக்கு அடையாள அட்டை போன்றவற்றை வழங்கினால் இதுபோல் உள்ளே ஊடுருவும் இடைத்தரகர்களை தவிர்க்கலாம் என்று பலரும் வலியுறுத்துகின்றனர். இதேபோல் கோயில் கோபுரத்துக்கு உள்ளே ஒரு பார்க்கிங்கும், கோயில் கோபுரத்துக்கு வெளியே ஒரு பார்க்கிங்கும் உள்ளது. கோபுரத்துக்கு உள்ளே வாகனங்களை நிறுத்துபவர்களிடம் கோயில் நிர்வாகம் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கிறது.

வெளியே மாநகராட்சி நிர்வாகம் மூலம் டெண்டர் விடப்பட்ட ஒரு பார்க்கிங் உள்ளது. உள்ளே முறைப்படி கட்டணம் செலுத்திவிட்டு வாகனங்களை எடுத்து வரும் சிலரிடம் வெளியேவும் பணம் கேட்டு தகராறு செய்கின்றனர். இதுகுறித்து காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் செயல் அலுவலர் முத்துலட்சுமியிடம் கேட்டபோது, ‘சுற்றுலா வழிகாட்டி என்ற பெயரில் சிலர் உள்ளே வருவது பிரச்சினையாவதாக என்னிடம் ஊழியர்கள் கூறினர்.

சில வெளிநபர்கள் அலுவலகத்தில் ஆட்கள் இல்லாத நேரத்தில் இதுபோல் உள்ளே நுழைந்து பிரச்சினை செய்கின்றனர். கோயில் பணியாளர்கள் சீருடையில் இருப்பார்கள். அவர்களுக்கு சீருடை வழங்கி இருக்கிறோம். இதுபோல் வெளிநபர்கள் உள்ளே வந்து கோயில் நிர்வாகங்களில் தலையிடுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் தினேஷ் கூறும்போது, ‘ஏகாம்பரநாதர் கோயிலில் கூட்டம் அதிகம் உள்ளது. அவர்களை ஒழுங்குபடுத்தி வரிசையில் அனுப்ப கோயில் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில் ஊழியர்களுக்கு சீரூடை இருந்தாலும் பலர் அதை அணிவதில்லை. இதனால் வரிசையை ஒழுங்குபடுத்துபவர்கள் கோயில் ஊழியர்களா? அல்லது வெளிநபர்களா? என்பது தெரியாத நிலை உள்ளது. வெளிநபர்கள், ஊழியர்கள்போல் உள்ளே நுழைந்து ஒழுங்கை சீர்குலைக்கின்றனர்’ என்றார்.

கோயில்களில் நடக்கும் சீர்கேடுகளை தடுக்கவும், கோயிலில் பக்தர்கள் சிரமமின்றி வழிபாடு நடத்தவும் இந்து சமய அறநிலையத்துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்துகின்றனர். தைப்பூசம் வரை பக்தர்கள் கூட்டம் அதிகம் இருப்பதால் போலீஸாரும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x