Last Updated : 04 Jan, 2025 10:45 AM

1  

Published : 04 Jan 2025 10:45 AM
Last Updated : 04 Jan 2025 10:45 AM

விக்கிரவாண்டி தனியார் பள்ளியில் குழந்தை உயிரிழந்த வழக்கு: தாளாளர் உள்பட மூவர் கைது

உயிரிழந்த பள்ளிக்குழந்தை

விழுப்புரம்: விக்கிரவாண்டியில் இயங்கி வரும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் யுகேஜி படித்து வந்த 4 வயதான குழந்தை லியா லட்சுமி, நேற்று பள்ளி உணவு இடைவேளையின் போது பள்ளி வளாகத்தில் இருந்த செப்டிக் டேங்கில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது. இந்த வழக்கு தொடர்பாக பள்ளியின் தாளாளர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனியார் பள்ளி வளாகத்தில் மூடப்படாமல் இருந்த கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் பல்வேறு தரப்பினரிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குழந்தையின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக பெற்றோரும், உறவினர்களும் கேள்வி எழுப்பி இருந்த நிலையில் கழிவுநீர் தொட்டிக்குள் இருந்து பள்ளி ஊழியர்கள், குழந்தையை மீட்டு காரில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் சிசிடிவி வீடியோ காட்சிகளை வெளியிட்டு சந்தேகங்களுக்கு பள்ளி நிர்வாகம் பதில் அளித்திருந்தது.

இந்நிலையில் உயிரிழந்த குழந்தை லியா லட்சுமியின் தந்தை பழனிவேல், தனது குழந்தையின் இறப்பிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி விக்கிரவாண்டி போலீஸில் வெள்ளிக்கிழமை புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் பள்ளியின் தாளாளர் எமில்டா, பள்ளி முதல்வர் டொமில்லா மேரி, உயிரிழந்த குழந்தை லியா லட்சுமியின் வகுப்பு ஆசிரியை ஏஞ்சல் ஆகிய 3 பேரையும் இன்று (சனிக்கிழமை) அதிகாலை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

இன்று காலை விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தை லியா லட்சுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குழந்தையின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது

இதற்கிடையே உயிரிழந்த குழந்தையின் பெற்றோர்களிடம் முதல்வர் அறிவித்த பொது நிவாரண நிதி ரூ.3 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் பொன்முடி பிற்பகலில் வழங்க உள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x