Published : 04 Jan 2025 06:11 AM
Last Updated : 04 Jan 2025 06:11 AM
சென்னை: மியூசிக் அகாடமி கடந்த 90 ஆண்டுகளாக இசை, நாட்டியம் போன்ற கலைகளுக்கு ஆற்றிவரும் சேவை உள்நாட்டு அளவிலும் உலக அளவிலும் ஒப்பற்ற ஒரு சாதனை என்று சென்னைக்கான கொரியா குடியரசு தூதரகத்தின் தலைவர் சாங் நியுன் கிம் தெரி வித்துள்ளார். மியூசிக் அகாடமியின் 18-வது ஆண்டு நாட்டிய விழா நேற்று சென்னை மயிலாப்பூர் டிடிகே அரங்கில் தொங்கியது.
சென்னைக்கான கொரியா குடியரசு தூதரகத்தின் தலைவர் சாங் நியுன்கிம், விழாவை தொடங்கி வைத்து, மோகினியாட்டக் கலைஞர் டாக்டர் நீனா பிரசாத்துக்கு ‘நிருத்திய கலாநிதி' விருதை வழங்கினார். தொடர்ந்து அகாடமியின் நாட்டிய விழா மலரையும் வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் சாங் நியுன் கிம் பேசியதாவது: கடந்த 50 ஆண்டுகளாக கலை, பண்பாட்டு ரீதியாக இந்தியா - கொரியா கலாச்சாரங்களுக்கு இடையே நிறைய ஒற்றுமைகள் உள்ளன. சென்னையிலேயே 5,000-க்கும் அதிகமாக எங்கள் நாட்டைச் சேர்ந்தவர்கள் இருக்கின்றனர். 1996-ல் தமிழகத்தின் முதல்வராக இருந்த கருணாநிதியால், பெரும்புதூரில் ஹூண்டாய் மோட்டார் ஆலை நிறுவப்பட்டது கொரிய மக்கள் சென்னையில் வாழ்வதற்கு காரணமாக அமைந்தது.
சென்னையில் இருக்கும் `இன்கோ' சென்டரில் பல்வேறு இந்திய - கொரிய கலாச்சார நிகழ்வுகள் நடக்கின்றன. அந்த வகையில் மியூசிக் அகாடமியின் இந்த பெருமை மிகுந்த நாட்டிய விழாவில் பங்கெடுப்பதில் மகிழ்கிறேன். மியூசிக் அகாடமி கடந்த 90 ஆண்டுகளுக்கும் மேலாக இசை, நாட்டிய கலை வடிவங்களுக்கு செய்துவரும் சேவை மகத்தானது. இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக வரவேற்புரை ஆற்றிய மியூசிக் அகாடமியின் தலைவர் என்.முரளி பேசியதாவது, நாட்டிய விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண் டிருக்கும் சென்னைக்கான கொரியா தூதரகத்தின் தலைவர் சாங் நியுன் கிம், பல செயற்கரிய செயல்களைச் செய்திருக்கிறார். 2024-ம் ஆண்டுக்கான `நிருத்திய கலாநிதி' விருதைப் பெறும் மோகினியாட்டக் கலைஞர் டாக்டர் நீனா பிரசாத் பல்வேறு நாட்டிய வகைமைகளைக் கற்றுத் தேர்ந்திருப்பவர்.
ஜன. 9 வரை நடக்கவிருக்கும் இந்தாண்டு நாட்டிய விழாவில் பல வகைமைகளைச் சேர்ந்த நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கின்றன. பரதநாட்டியம், மோகினியாட்டம், கதக், விலாசினி நாட்டியம், குச்சிபுடி, ஒடிஸி உள்ளிட்டவை அடங்கும். இவ்வாறு அவர் பேசினார்.
ஏற்புரை வழங்கிய டாக்டர் நீனாபிரசாத், அவர் நாட்டியம் கற்ற கலாமண்டலம் ஷேமாவதி, கலாமண்டலம் சுகந்தி, பரத நாட்டிய குரு அடையாறு கே.லஷ்மணன், குச்சிபுடி குரு வேம்பட்டி சின்ன சத்யம், கதகளி குரு வேம்பயம் அப்புகுட்டன் பிள்ளை ஆகியோருக்கும், அகாடமிக்கும், சக கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்தார். நாட்டிய நிகழ்ச்சியை என்.ராம்ஜி ஒருங்கிணைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT