Published : 04 Jan 2025 03:45 AM
Last Updated : 04 Jan 2025 03:45 AM

7 மணி நேரம் காத்திருந்த அமலாக்கத் துறை அதிகாரிகள்: அமைச்சர் துரைமுருகன் வீட்டில் நடந்தது என்ன?

காட்பாடியில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்ற அமைச்சர் துரைமுருகன் வீட்டின் முன்பாக குவிந்த திமுகவினர். படங்கள்: வி.எம்.மணிநாதன்


கதிர் ஆனந்தின் பொறியியல் கல்லூரி உட்பட 4 இடங்களிலும் நடத்தப்பட்டது.

வேலூர்: காட்பாடியில் உள்ள அமைச்சர் துரைமுருகனின் வீடு உட்பட 4 இடங்களில் நேற்று அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வீடு வேலூர் அருகே காட்பாடி காந்திநகரில் உள்ளது. இந்த வீட்டில் அவரது மகனும் வேலூர் எம்.பி.யுமான கதிர் ஆனந்த் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் குழுவினர் சிஆர்பிஎப் காவலர்கள் பாதுகாப்புடன் அமைச்சர் துரைமுருகனின் வீடு மற்றும் கதிர் ஆனந்துக்கு சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி, துரைமுருகனுக்கு நெருங்கிய கட்சி பிரமுகரான பூஞ்சோலை சீனிவாசன், இவரது உறவினர் தாமோதரன் ஆகியோர் வீடுகளில் நேற்று காலை 7 மணியளவில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அமைச்சர் துரைமுருகன் சென்னையில் இருந்தார். எம்.பி. கதிர் ஆனந்த் குடும்பத்துடன் துபாய் சென்றுள்ளார். இதனால், அமைச்சரின் வீட்டில் மட்டும் சோதனை தொடங்காத நிலையில் மற்ற இடங்களில் சோதனை நடைபெற்றது.

இதனால், அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர். இதுதொடர்பாகக் கதிர் ஆனந்த் தரப்பிலிருந்து இ-மெயில் அனுப்பினால் அதன் அடிப்படையில் சோதனை நடத்தப்படும் என திமுக முக்கிய நிர்வாகிகளிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். காட்பாடி திமுக கிளை செயலாளர் வன்னியராஜா, வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில் குமார், வழக்கறிஞர் பாலாஜி ஆகியோர் முன்னிலையில் சோதனை நடத்த கதிர்ஆனந்த் தரப்பிலிருந்து அமலாக்கத்துறைக்கு மின்னஞ்சல் மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, சோதனை தொடர்பான ஆவணங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கையெழுத்திட்டு வன்னியராஜா, சுனில்குமாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, அமலாக்கத்துறை அதிகாரிகளை அவர்கள் சோதனை செய்த பிறகே வீட்டினுள் அனுமதித்தனர். சுமார் 7 மணி நேர காத்திருப்புக்கு பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர்.

பூஞ்சோலை சீனிவாசன் மற்றும் அவரது உறவினர் தாமோதரன் ஆகியோர் வீடுகளில் சுமார் 7 மணி நேரம் நடைபெற்ற சோதனை முடிந்தது. பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் இருந்த ஆவணங்கள் மற்றும் ஒரு பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட பணத்தை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர். அதேபோல், கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடந்த சோதனையில் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு உதவியாக பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சென்றனர்.

துரைமுருகன் வீட்டில் அமைச்சரின் தனி அறை பூட்டியிருந்ததால் அந்த அறையின் பூட்டைஉடைக்க, இரும்பு கடப்பாரையை வீட்டினுள் கொண்டு சென்றனர். நள்ளிரவு வரை சோதனை நீடித்தது. முன்னதாக, அமைச்சரின் வீட்டின் முன்பு திமுகவினர் திரண்டனர். திமுகவினர் அமருவதற்காக வீட்டின் முன்பு பிளாஸ்டிக் நாற்காலிகள் போடப்பட்டன. அவர்களுக்கு டீ, சமோசா, மதிய உணவு வழங்கப்பட்டது.

2019 மக்களவைத் தேர்தலில் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அப்போது, 2019 மார்ச் 30-ம் தேதி அமைச்சர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி ரூ.10 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். இதன் தொடர்ச்சியாக கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி மற்றும் பூஞ்சோலை சீனிவாசன், உறவினர் தாமோதரன் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த ரூ.11 கோடியே 51 லட்சத்து 800 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில், சுமார் ரூ.9 கோடி 200 ரூபாய் புத்தம் புதிய நோட்டுகளாக இருந்தது.

இதையடுத்து, வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக காட்பாடி காவல் நிலையத்தில் தேர்தல் செலவு கணக்கு பார்வையாளர் அளித்த புகாரின் பேரில் கதிர்ஆனந்த், பூஞ்சோலை சீனிவாசன், தாமோதரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும், புத்தம் புது ரூபாய் நோட்டுகள் பதுக்கி வைத்திருந்தது தொடர்பாக பூஞ்சோலை சீனிவாசன், தாமோதரன் மற்றும் காட்பாடி கனரா வங்கி செஸ்ட் கிளை மேலாளர் தயாநிதி மீது வழக்குப்பதிவு செய்தனர். 2019-ல் வருமான வரி சோதனை நடந்த இடங்களில் தற்போது அமலாக்கத் துறை சோதனை நடந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x