Published : 04 Jan 2025 03:19 AM
Last Updated : 04 Jan 2025 03:19 AM
வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் ராணி வேலுநாச்சியார் ஆகியோர் அடிபணியாத வீரத்துக்கு அடையாளமாகத் திகழ்ந்தவர்கள் என்று அரசியல் தலைவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.
இந்திய சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 265-வது பிறந்தநாள் மற்றும் வீரமங்கை ராணி வேலுநாச்சியரின் 295-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் வேலுநாச்சியாரின் திருவுருவப் படங்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார். தவெக தலைவர் விஜய், பனையூர் அலுவலகத்தில் வேலுநாச்சியாரின் படத்துக்கு மரியாதை செய்தார்.
தொடர்ந்து ஆளுநர், முதல்வர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
ஆளுநர் ஆர்.என்.ரவி: வீரம், ஞானம் மற்றும் தேசபக்தியின் உருவங்களாக அடக்குமுறையை எதிர்த்து உறுதியுடன் போராடியவர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் வீரமங்கை வேலு நாச்சியார். அவர்களது பிறந்தநாளில், தேசம் அவர்களுக்கு மரியாதை செலுத்துகிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: ஆதிக்கத்துக்கு அடிபணியும் பேச்சுக்கே இடமில்லை என தாய்நாட்டின் விடுதலைக்காக வெகுண்டெழுந்த தீரச்சுடர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் வீரமங்கை வேலுநாச்சியாரின் புகழ் வாழ்க.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்: நாட்டு விடுதலைக்கான போர்க்களத்தில் ஆதிக்க சக்திகளை சிதறடித்தவர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் வீரமங்கை வேலுநாச்சியார். அடிபணியாத வீரத்துக்கு இன்றும் அடையாளமாக திகழும் இருவரின் புகழ் ஓங்கட்டும்.
முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மன், வீரமங்கை வேலுநாச்சியார் ஆகியோரின் வீரத்தையும், தியாகத்தையும் வணங்குகிறேன்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: ஆங்கிலேயரின் அடக்குமுறைக்கு எதிராக போரிட்டு உயிரை துச்சமெனத் துறந்தவர் கட்டபொம்மன். ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போர்க்களம் கண்ட முதல் பெண் அரசி வேலுநாச்சியார். வீரத்தின் அடையாளமாக திகழும் இருவரின் தீரத்தையும் போற்றி வணங்குகிறேன்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: மண்ணின் உரிமைக்காகவும், மக்கள் நலனுக்காகவும் துணிச்சலுடன் தூக்குக் கயிற்றை முத்தமிட்டவர் வீரபாண்டிய கட்டபொம்மன். ஆங்கிலேயருக்கு எதிராக படையைத் திரட்டி, ஆங்கிலேயரை தோற்கடித்த முதல் வீராங்கனை வேலுநாச்சியார். இவர்களது புகழை போற்றி வணங்குவோம்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: ஆங்கிலேயரை எதிர்த்து போர்க்கொடி உயர்த்தி, இந்திய விடுதலைக்கு முன்னோடியாக விளங்கியவர் கட்டபொம்மன். கணவர் மறைந்தபோது மனம் தளராமல் 8 ஆண்டுகளுக்குப்பின் படை திரட்டி மீண்டும் சிவகங்கையை கைப்பற்றி ஆட்சி செய்த வீரமங்கை வேலுநாச்சியார். இருவரது வீரத்தையும், தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: தூக்குமேடையில் துணிச்சலுடன் புரட்சி செய்தவர் கட்டபொம்மன். இந்திய வரலாற்றில் ஆங்கிலேயர்களை போரில் வீழ்த்தி முடிசூடிய ஒரே ராணி வேலுநாச்சியர். வீரம் செறிந்த இவர்களின் வரலாற்றை எந்நாளும் நினைவில் கொள்வோம்.
தவெக தலைவர் விஜய்: விடுதலை போராட்டத்தில் நாட்டுக்கே முன்னோடியாக போர்களத்தில் களமாடிய வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்தநாளில், பெண்ணுரிமை போற்றுவோம், பெண்களின் நலன்கள் காப்போம், பெண்களின் பாதுகாப்புக்கு எப்போதும் அரணாக இருப்போம் என உறுதியேற்போம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT