Published : 04 Jan 2025 01:37 AM
Last Updated : 04 Jan 2025 01:37 AM
டெல்லியில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன், தமிழக பாஜக தலைவர் பதவியை கேட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் பாஜக அமைப்பு தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த மாதத்துக்குள் பாஜக தேசியத் தலைவர், மாநிலத் தலைவர் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டு, தலைவர்கள் நியமிக்கபட்டுவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தமிழக பாஜக தலைவரை தேர்வு செய்யும் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.
அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு தமிழிசை சவுந்தரராஜன், மிசோரம் மாநிலத்துக்கு வானதி சீனிவாசன், லட்சத்தீவுக்கு பொன்.ராதாகிருஷ்ணன், நாகலாந்துக்கு முரளிதரன் என பல்வேறு மாநிலங்களுக்கு பாஜக தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு தேர்தல் பொறுப்பாளராக நியமித்தவுடன் டெல்லி சென்ற தமிழிசை சவுந்தராஜன், கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்துப் பேசினார். அப்போது, "அண்ணாமலை இருக்கும்வரை அதிமுகவுடன் கூட்டணி சாத்தியமாகாது. தன்னை மாநிலத் தலைவராக நியமித்தால், கடந்த முறைபோல அதிமுகவுடன் இணக்கமான சூழல் உருவாகி, வெற்றிக் கூட்டணி ஏற்படும்" என்று தமிழிசை கேட்டதாகத் தெரிகிறது.
தமிழக மாநில பாஜக தலைவர் பதவியை தமிழிசை எதிர்பார்த்து இருப்பதாகவும், ஆனால், தமிழிசை, வானதி, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வெவ்வேறு மாநிலங்களின் பாஜக தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டிருப்பதால், இந்த முறையும் அண்ணாமலைதான் மாநிலத் தலைவராக நியமிக்கப்படுவார் என்று அண்ணாமலை தரப்பில் தெரிவித்து வருகின்றனர். அதேநேரத்தில், அந்தமான் நிகோபார் பாஜக தலைவரை தேர்வு செய்யும் பொறுப்பாளராக தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டது தொடர்பாகத்தான் அவர் டெல்லி சென்றாரே தவிர, மாநிலத் தலைவர் பதவியை கேட்கச் செல்லவில்லை என அவரது ஆதரவாளர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT