Published : 04 Jan 2025 01:22 AM
Last Updated : 04 Jan 2025 01:22 AM

கால்நடை மருத்துவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதா? - தமிழக அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

நோய்வாய்ப்படும் வனவிலங்குகளுக்கு சிகிச்சை அளிக்க கால்நடை மருத்துவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பியுள்ள உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

தமிழக வனப்பகுதிகளில் கடந்த 2021-ம் ஆண்டு முதல் போதிய மருத்துவ வசதிகள் இல்லாமல் 20 யானைகள் உயிரிழந்துள்ளதால், நோய்வாய்ப்படும் வனவிலங்குகளுக்கு சிகிச்சை அளிக்க சர்வதேச தரத்தில் பயிற்சி பெற்ற கால்நடை மருத்துவர்கள் கொண்ட குழுவை அமைக்கக்கோரி வனவிலங்குகள் நல ஆர்வலரான முரளிதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், குடும்பத்தில் இருந்து பிரிந்த யானைக்குட்டிகளை மற்ற யானைகள் தங்களுடன் சேர்ப்பது மிகவும் குறைவு. எனவே தனியாக பிரிந்த குட்டியானைகளை ஒன்றாக பராமரித்து பின் அவற்றை குழுவாக வனப்பகுதிக்குள் விட வேண்டும். வனப்பகுதியில் வனவிலங்குகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் காட்டு நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் என். சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், வன விலங்குகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள மையங்களில் நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ கால்நடை மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனரா, அவர்களுக்கு முறையான பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளதா, எத்தனை கால்நடை மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ளன என அரசுக்கு கேள்வி எழுப்பினர்.

பி்ன்னர் இதுதொடர்பாக வரும் பிப்.4-ம் தேதிக்குள் போதிய விவரங்களுடன் பதிலளிக்க தமிழக அரசுக்கும், வனத்துறைக்கும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர். அதேபோல கைவிடப்படும் குட்டி யானைகளை குழுவாக வளர்த்து பின்னர் வனப்பகுதியில் விடுவது குறித்தும் காட்டு நாய்களை அப்புறப்படுத்துவது குறித்தும் வனத்துறை அதிகாரிகள் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x