Published : 03 Jan 2025 08:04 PM
Last Updated : 03 Jan 2025 08:04 PM

‘நவீன எமர்ஜென்சி’ போக்கை முதல்வர் ஸ்டாலின் நிறுத்திக்கொள்ள வேண்டும்: தமிழக பாஜக

சென்னை: “மக்கள் விரோத திமுக அரசு எதிர்த்து போராட்டத்தில் ஈடுபடும் தமிழக பாஜகவின் மீதும், மற்ற கட்சிகள் மீதும் காவல் துறையின் தொடர் அடக்கு முறையை பயன்படுத்தி மிரட்டுவது, தடுக்க நினைப்பது, வழக்கு பதிவு, கைது செய்வது என்று நவீன எமர்ஜென்சி காலத்தை நினைவுபடுத்துவது போல் செயல்படுவதை தமிழக முதல்வர் ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று தமிழக பாஜக கூறியுள்ளது.

இது குறித்து தமிழக பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்ட அறிக்கையில், “பெண் குழந்தைகள், கல்லூரி மாணவிகள், நடுத்தர பெண்கள், முதியவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருமே திமுக அரசின் நிர்வாக சீர்கேட்டால், காவல் துறையின் மெத்தனத்தால் நாள்தோறும் பாதிக்கப்படுவது தொடர் கதை ஆகி வருகிறது. தமிழக மக்கள் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் கொடுமையை கண்டித்து தன் எழுச்சியாக தன்முனைப்புடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீதியை நிலைநாட்ட வேண்டிய திமுக அரசும், சட்டத்தை அமல்படுத்த வேண்டிய தமிழக காவல் துறையும், கடமையை செய்யாமல் சோரம் போக வேண்டிய சூழ்நிலையை உருவாக்கியது. கயவனா? கயவர்களா?, ‘யார் அவர் ?’, ‘ஏன் இந்த மாபாதகம்?’ என்கிற கேள்வியை தமிழக மக்களின் மனதில் எரிமலையாய் வெடித்ததை தொடர்ந்து அனைத்து கட்சிகளுமே தற்போது திமுக அரசை எதிர்த்து போராட்டம் மேற்கொண்டு வருகின்றன.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் திமுக அரசின் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு முடிவு கட்டுவது ஒவ்வொருவரின் கடமை என்பதை உணர்ந்து, தமிழகத்தின் சமூக நல இயக்கங்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், அனைத்து அரசியல் கட்சிகள், பெண்ணுரிமை சங்கங்கள் அனைத்துமே களத்தில் இறங்கி போராட்டம் நடத்துவதை அராஜகத்தோடு திமுக அரசின் காவல்துறை நசுக்க முற்படுவது சட்டவிரோதமானது.

இன்று தமிழக பாஜக மகளிர் அணி சார்பாக மதுரையில் இருந்து சென்னை நோக்கி நீதி கேட்டு நெடும் பயணம் தொடங்க முற்படும்போது தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு மற்றும் தமிழக பாஜக மகளிர் அணி தலைவி உமாரதி தலைமையில் பாஜக மகளிர் அணியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் இருந்து போராட்டத்தில் கலந்து கொள்ள மதுரையை நோக்கி கிளம்பிய பாஜக மகளிர் அணியினர் முன்னிரவில் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டுள்ளனர்.

மக்கள் விரோத திமுக அரசு எதிர்த்து போராட்டத்தில் ஈடுபடும் தமிழக பாஜகவின் மீதும் மற்ற கட்சிகள் மீதும் காவல்துறையின் தொடர் அடக்கு முறையை பயன்படுத்தி மிரட்டுவது, தடுக்க நினைப்பது, வழக்கு பதிவு, கைது செய்வது என்று நவீன எமர்ஜென்சி காலத்தை நினைவுபடுத்துவது போல் செயல்படுவதை தமிழக முதல்வர் ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அமைதியான மக்கள் புரட்சி மூலம் திமுக என்ற கட்சி அரசியலில் இருந்து அப்புறப்படுத்தப்படும்" எஎன்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x