Published : 03 Jan 2025 07:21 PM
Last Updated : 03 Jan 2025 07:21 PM

‘தமிழகத்தில் இந்துக்கள் மீது குடும்பக் கட்டுப்பாடு திணிப்பு’ - இந்து முன்னணி குற்றச்சாட்டு

சென்னை: “முஸ்லிம் பெண்கள் இரண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் போது அரசு மருத்துவமனைகளில் அவர்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ளவேண்டும் என்று பேசுவது கூட இல்லை. மாறாக, இந்து குடும்பங்கள் மீது மட்டும் குடும்பக் கட்டுப்பாடு திணிக்கப்படுகிறது என்பதே உண்மை. தமிழக அரசு கடந்த காலங்களில் கருத்தடை ஆபரேஷன் செய்து கொண்டவர்கள் பட்டியலை வெளியிட்டால் உண்மை தெரிய வரும்,” என்று இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த நவம்பர் 25-ம் தேதி பெண் ஒருவர் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு குழந்தை பிறந்ததும் மருத்துவர்கள் அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் தெரியபடுத்தாமலேயே கருத்தடை சாதனமான காப்பர்-டியை பொறுத்தி உள்ளனர். இதில் கொடுமை என்னவென்றால் காப்பர்-டியை சரியாக பொருத்தாமல் சதைப்பகுதியோடு சேர்த்து பொருத்தியதால் அந்தப் பெண்ணுக்கு உடல் ரீதியான பிரச்சினைகள் அதிகமாகி தற்போது ஆபத்தான நிலைமையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட பெண்ணிடம் எந்த விவரமும் கூறாமல், அவரது குடும்பத்தாருடைய சம்மதம் ஏதுமின்றியும் கருத்தடை சாதனம் பொருத்தப்பட்டுள்ளது என பெண்ணுடைய குடும்பத்தார் புகார் அளித்துள்ளனர். இது ஏதோ நெல்லை அரசு மருத்துவமனையில் மட்டும் நடந்ததல்ல. தமிழகத்தில் உள்ள பல அரசு மருத்துவமனைகளிலும் இதுபோன்ற செயல்கள் நடக்கிறது என்ற அதிர்ச்சியான செய்தியை பார்க்கிறோம்.

குடும்பக் கட்டுப்பாட்டை அரசாங்கம் வலியுறுத்துகிறது என்ற காரணத்தை முன்வைத்து இதுபோன்ற மோசடி செயல்களில் ஈடுபடுவது சட்டரீதியாக தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும். மருத்துவ ரீதியாக ஒரு பெண் பிரசவித்த பிறகு, அவர்களுடைய உடல் தசைகள் மிகவும் தளர்ந்துவிடும். அப்படிப்பட்ட நிலையில் பிரசவித்த தாய்க்கு அவசரகதியாக கருத்தடை சாதனம் பொருத்தும் பொழுது அவருடைய உயிருக்கே கூட ஆபத்து ஏற்படலாம். ஆனால் இதையெல்லாம் தெரிந்தும் கூட மருத்துவர்கள் மிகவும் அலட்சியமாக நடந்து கொண்டது அதிர்ச்சி அளிக்கிறது.

எங்களது அனுமதி இல்லாமல் ஏன் கருத்தடை சாதனம் பொருத்தினீர்கள்? என சம்பந்தப்பட்ட பெண்ணோ அவரது குடும்பத்தாரோ கேள்வி கேட்கும் பொழுது இது அரசாங்கத்தின் திட்டம் என்றும், நீங்கள் சில மாதங்கள் கழித்து தேவையில்லை என்றால் அதை எடுத்து விடலாம் என்றும் கூறுவது மிகவும் கண்டிக்கத்தக்கது.

பல அரசு மருத்துவமனைகளில் பிரசவ வார்டு பகுதிகளில் ஒரு குழந்தைக்கு மேல் உள்ள இந்து பெண்கள் அனுமதிக்கப்பட்டால் இனியும் உங்களுக்கு அடுத்த குழந்தை தேவையா? போன்ற கேள்விகளை மட்டுமல்ல இங்கு எழுதவே முடியாத அளவுக்கு இழி சொற்களை, காது கூசச் செய்யும் அவமரியாதையான சொற்களை அந்தக் குடும்பத்தாரைக் கேட்டு அங்கே பணிபுரிபவர்கள் கேவலப்படுத்துகின்றார்கள். அதையும் மீறி வாதிடுகிறவர்களுக்கு பிரசவித்த பின் மயக்க நிலையில் இருக்கும்போது அவர்களுக்கு கருத்தடை சாதனம் பொருத்தி விடுகின்றனர் அல்லது கட்டாயபடுத்தி கருத்தடை ஆபரேஷன் செய்கின்றனர். இத்தகைய செயல் மருத்துவ குற்றமாகும்.

இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் குடும்பக் கட்டுப்பாடு பற்றிய அரசின் உத்தரவு என்பது அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும். ஆனால் குடும்பக் கட்டுப்பாடு என்பது இந்துக்களை மட்டும் கட்டாயப்படுத்தி செய்யப்படும் ஒன்றாக தமிழக அரசு மருத்துவமனைகளில் இருந்து வருகிறது. முஸ்லிம் மத வழக்கப்படி குடும்ப கட்டுப்பாடு என்பது (ஹராம்) மதவிரோதம் என்றே பழக்கத்தில் உள்ளது.

முஸ்லிம் பெண்கள் இரண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் போது அரசு மருத்துவமனைகளில் அவர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ளவேண்டும் என்று பேசுவது கூட இல்லை. மாறாக இந்து குடும்பங்கள் மீது மட்டும் குடும்பக் கட்டுப்பாடு திணிக்கப்படுகிறது என்பதே உண்மை. தமிழக அரசு கடந்த காலங்களில் கருத்தடை ஆபரேஷன் செய்து கொண்டவர்கள் பட்டியலை வெளியிட்டால் உண்மை தெரியவரும்.

கடந்த ஆண்டு பிரதமர் அலுவலகத்தின் பொருளாதாரப் பிரிவு கணக்கெடுப்பின்படி இந்துக்களின் மக்கள் தொகை விகிதாசாரம் மிக வேகமாக குறைந்து வருகிறது என்பதை சுட்டிக் காட்டியது. முஸ்லிம்களின் மக்கள் தொகை விகிதாசாரம் மிக வேகமாக அதிகரித்து வருகிறது என்ற தகவலும் அதில் இருந்தது.மேலும் இதுபோன்ற குடும்ப கட்டுப்பாடு உத்தரவுகளால் இந்துக்களின் ஜனத்தொகை எதிர்காலத்தில் மிகவும் குறையும் அபாயம் ஏற்படும் என்பதையும் நாம் அனைவரும் உற்று நோக்க வேண்டிய விஷயமாக உள்ளது.

“நாம் இருவர் நமக்கு இருவர்” என்று விளம்பரம் செய்தார்கள். பிறகு “நாம் இருவர் நமக்கு ஒருவர்” என்று மயக்கினார்கள். தற்போது, “ நாமே குழந்தை நமக்கேன் குழந்தை” என்ற நிலைமைக்கு இந்து சமுதாய மக்கள் மனங்களில் பதிய வைக்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில் தமிழக அரசு மருத்துவமனைகளில் இந்து பெண்களுக்கு தெரியாமலேயே அவர்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்யும் மற்றும் கருத்தடை சாதனங்கள் பொருத்திய மோசடி வெளிவந்துள்ளது.

இந்த அடாவடிச் செயலை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். அதனுடைய வெளிப்படை தன்மையை அரசு மருத்துவமனை ஆதாரங்களாக வைத்திருக்க வேண்டும்.நெல்லையில் ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாப நிலைமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இன்னும் வெளியே வராமல் எத்தனையோ இதுபோன்ற சம்பவங்கள் அரசு மருத்துவமனைகளில் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே தமிழக அரசு உடனடியாக இந்த பிரச்சினையை கண்காணிக்க உத்தரவிட வேண்டும்.

குடும்பக் கட்டுப்பாடு மற்றும் கருத்தடை சாதனங்கள் பொருத்துவது குறித்த உடன்பாட்டில் பெண்ணின் கணவரிடமும் அவரது குடும்பத்தாரிடமோ கையெழுத்து வாங்குவதை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும். அதேபோல பிரசவம் குறித்த பதிவுகளை முறையாக புள்ளிவிவர கணக்குகளோடு ஆவணப்படுத்தி வைத்திருக்க வேண்டும். மேலும் நெல்லையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உடனடியாக உயர்தரமான மருத்துவ சிகிச்சை வசதிகளை செய்து தர வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x