Last Updated : 03 Jan, 2025 06:39 PM

2  

Published : 03 Jan 2025 06:39 PM
Last Updated : 03 Jan 2025 06:39 PM

“டங்ஸ்டன் திட்டத்தை ஒருபோதும் வர விடமாட்டோம்” - மேலூர் ஆர்ப்பாட்டத்தில் வைகோ உறுதி

மதுரை: டங்ஸ்டன் திட்டத்தை ஒருபோதும் வரவிடமாட்டோம் என மேலூர் ஆர்ப்பாட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசினார்.

மதுரை மாவட்டம், மேலூர் அருகே நாயக்கர்பட்டி, அரிட்டாபட்டி, வல்லாளபட்டி, எட்டிமங்கலம், கூலானிபட்டி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களை உள்ளடக்கிய சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு ஹிந்துஸ்தான் சிங்க் நிறுவனத்திற்கு ஏலம் விட்டது. இதற்கு எதிராக கிராம மக்கள், பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகளும் போராட்டம் நடத்தினர். இத்திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி மேலூர் பகுதியில் பொதுமக்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்துகின்றனர்.

இந்நிலையில், டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக மதிமுக சார்பில், ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். இதன்படி,மேலூர் பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தலைமை பங்கேற்று பேசியது: ''கடந்த ஓராண்டாக நான் எந்த ஆர்ப்பாட்டத்திலும் பங்கேற்கவில்லை. உடல்நிலை சரியியின்றி இருந்ததால் அவரால் போராட முடியாது என, ஒரு சிலர் கேட்கின்றனர். அக்கட்டத்தை கடந்து முதல் இடமாக மேலூருக்கு இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வந்துள்ளேன்.

ஆசாபாசங்களுக்கு அடிமையானவன் அல்ல நான். கோடி கோடியான பணத்தையும் தூசியாக நினைப்பவன். நாங்கள் மாசற்றவர்கள். உயிரையும் தாரை வார்த்து கொடுக்கும் தியாக சிகரங்கள் நாங்கள். முல்லைப் பெரியாறு, ஸ்டெர்லைட் , காவிரி பிரச்சனை, மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற பிரச்சனைகளில் எல்லாம் தமிழக மக்களுக்காக போராட்டத்தில் ஈடுபட்டேன். இது தொட்பான போராட்டங்களில் நான் ஈடுபட்டபோது அனைத்து கட்சியினரும் எனக்கு ஆதரவளித்தனர்.

மேலூரில் டங்ஸ்டன் எடுக்க, இந்துஸ்தான் சிங்க் நிறுவனத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் கவனத்திற்கு கொண்டு வராமல் டெல்லியில் இருந்து இந்த உத்தரவு வந்துள்ளது. நான் உயிரோடு இருக்கும் வரையிலும் இப்பகுதியில் டங்ஸ்டன் திட்டத்தை வரவிடவே மாட்டேன் என முதல்வர் கூறி இருக்கிறார். சுமார் 3 ஆயிரம் ஆண்டு வரலாறு கொண்டது இந்த மேலூர் பூமி, இங்கு குடைவரை கோயில்கள், சமணர் படுக்கை, தமிழ் கல்வெட்டு உள்ளிட்டவை இங்கு இருக்கின்றன.

தமிழக மக்களுக்கு ஊறு விளைவிக்கும் எந்த திட்டத்தையும் அனுமதிக்க மாட்டோம். அரிட்டாப்பட்டி கிராமம் முதல் பல்லுயிர் வாழும் தளம். இங்கு 72 ஏரிகள் 700 இயற்கை சுனைகள் 250 வகை பறவைகள் 200க்கும் மேற்பட்ட உயிரினங்கள் வாழ்கின்றனர். நாங்களும் அதில் உறுதியாக இருக்கிறோம். அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க, நிரந்த தடை பெறும் வகையில் போராட்டத்தை தொடர்ந்து மேற்கொள்வோம்.

பழமையான யானைமலைக்கு பாதிப்பு, ஆபத்து வந்தபோது, அதை அப்போதைய திமுக தலைவர் கலைஞரிடம் எடுத்துச்சொல்லி ரத்து செய்தோம். தமிழகத்தை எல்லா வகையிலும் காப்போம். உங்களில் ஒருவனாக உங்கள் சார்பாக கலிங்கப்பட்டியில் பிறந்த இந்த வைகோ இருப்பான் என மகிழ்ச்சியுடன் உங்களுக்கு தெரிவிக்கிறேன். இந்துஸ்தான் சிங்க் நிறுவன கூட்டத்தை மதுரை மண்டலத்தில் நுழைய விடமாட்டோம்'' என்று அவர் பேசினார்.

பிறகு வைகோ செய்தியாளர்களிடம் கூறுகையில்,' 'மத்திய அரசு டங்ஸ்டன் திட்டத்தை மேலூரில் கொண்டு வர முடியாது. பல்லாயிரக்கணக்கான மக்களை திரட்டி எந்த இடத்திலும் போராட்டம் செய்வோம். அவர்களது மெஷினை இங்கு கொண்டு வர விடமாட்டோம். தமிழகத்தில் மத்திய அரசின் நான்கு திட்டங்களை நான் காலி செய்திருக்கிறேன். மக்களை பாதிக்கும் விரோதமான திட்டங்களை வரவிடாமல் தடுத்துள்ளேன்,'' என்றார்.

இந்த ஆர்பாட்டத்தில் மாநில அவைத் தலைவர் அர்ஜூன்ராஜ், பொருளாளர் செந்திலதிபன், துணை பொதுச் செயலாளர்கள் மல்லை சத்யா, ராஜேந்திரன், ரொகையா, எம்எல்ஏக்கள் பூமிநாதன், சதன் திருமலைக்குமார், ரகுராமன், மதுரை புறநகர் வடக்கு மாவட்ட மார்நாடு, தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயராமன், மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் முனியசாமி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் தொண்டர்களும் பங்கேற்றனர். அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x