Published : 03 Jan 2025 04:04 PM
Last Updated : 03 Jan 2025 04:04 PM
சென்னை: “பல்வேறு குற்றச்சாட்டுக்கு ஆளான அதானியை காப்பாற்றி வரும் மோடியின் மத்திய அரசு, தமிழகத்தில் அமலாக்கத் துறை மூலம் மூத்த அமைச்சர், திமுக பொதுச் செயலாளர் துரை முருகன் வீட்டில் சோதனை என்ற பெயரில் தாக்குதலை நடத்தி வருகிறது. பாஜகவின் அதிகார அத்துமீறலையும், எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் வன்மத்தையும் வன்மையாக கண்டிக்கிறேன்.” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாட்டின் மிகப்பெரும் பன்னாட்டு குழும நிறுவனங்களில் ஒன்றான அதானி குழும நிறுவனங்களின் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றச்சாட்டில் அதானி குழுமம் உற்பத்தி செய்யும் சூரிய ஒளி மின்சாரத்தை அதீத விலைக்கு கொள்முதல் செய்ய மாநில அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், உண்மைக்கு மாறான தகவல்களை தெரிவித்து அமெரிக்க குடிமக்களிடம் நிதி திரட்டியதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஹிண்டன் பர்க் நிறுவனம் அதானி குழும பங்குசந்தை கணக்கியல் மோசடி ஈடுபட்டு பெரும் செல்வம் ஈட்டியதாக குற்றம் சாட்டியது. தொடர்ந்து பங்குசந்தை ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் மற்றும் அவரது கணவர் இருவரும் அதானி குழுமத்துக்கு சலுகை காட்டி, பெரும் பணம் சம்பாதித்துள்ளனர் என்று இரண்டாவது முறையாக ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றம் சாட்டியது.
அதானி குழும நிறுவனங்களின் மீது தொடர்ந்து எழுந்து வரும் புகார்கள் குறித்து, நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என இடதுசாரி கட்சிகள் உட்பட எதிர்கட்சிகள் கோரிக்கை வைத்த போது, மோடியின் மத்திய அரசு ஏற்க மறுத்து நாடாளுமன்ற நடவடிக்கைகளை முடக்கியது. நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என்ற எதிர்கட்சிகளின் கோரிக்கையையும் நிராகரித்து விட்டு, அதானி குழுமத்தை காப்பாற்றும் முயற்சியில் நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் கேலிக்கூத்தாக்கி வருகிறது.
இந்த நிலையில் “ஒரே நாடு, ஒரே தேர்தல்” என்ற முயற்சி கூட்டாட்சி கோட்பாட்டை அழித்தொழித்து விடும், மாநில உரிமைகளை பறித்து, தனி நபர் மையப்பட்ட சர்வாதிகாரத்துக்கு கொண்டு செல்லும் என இடதுசாரி கட்சிகளும், திமுக உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சிகளும் தீவிரமாக எதிர்த்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை மேற்கொண்டுள்ளன.
இந்த நிலையில் மோடியின் மத்திய அரசு அரசியலமைப்பு அதிகாரம் பெற்ற அமைப்புகளை அரசியல் கருவிகளாக பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை மிரட்டவும், உடைக்கவும் பயன்படுத்தி வருகிறது.
அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கு ஆளாகி வரும் அதானியிடம் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. அவரது நிறுவனங்களில் எதிலும் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. அவரை கைது செய்யவும் முன்வரவில்லை. இப்படி குற்றச்சாட்டுக்கு ஆளான அதானியை காப்பாற்றி வரும் மோடியின் மத்திய அரசு, தமிழகத்தில் அமலாக்கத் துறை மூலம் மூத்த அமைச்சர், திமுக பொதுச் செயலாளர் துரை முருகன் வீட்டில் சோதனை என்ற பெயரில் தாக்குதலை நடத்தி வருகிறது. பாஜகவின் அதிகார அத்துமீறலையும், எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் வன்மத்தையும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.” என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT