Published : 03 Jan 2025 10:33 AM
Last Updated : 03 Jan 2025 10:33 AM
கோவை: கேரள மாநிலம் கொச்சினில் இருந்து கோவை பீளமேட்டில் உள்ள பாரத் கேஸ் குடோனுக்கு எல்பிஜி கேஸ் ஏற்றி வந்த டேங்கர் லாரி இன்று அதிகாலை விபத்துக்குள்ளானது.
லாரியின் ஆக்ஸில் (axle) உடைந்து டேங்கர் மட்டும் சாலையில் விழுந்த நிலையில் , டேங்கரில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டது. விபத்து குறித்து லாரி ஓட்டுனர் பாரத் கேஸ் நிறுவன அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பாரத் கேஸ் நிறுவன அதிகாரிகளும் தீயணைப்புத் துறையினரும் வாயுக் கசிவை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்துக்கு வந்த பாரத்கேஸ் நிறுவன பொறியாளர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர். இரண்டு கிரேன்கள் மூலம் லாரியினை தூக்கி நிறுத்த முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டதுடன், தீயணைப்புத்துறை மற்றும் பாரத் கேஸ் நிறுவன அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “அதிகாலை 3.15 மணியளவில் கொச்சியில் இருந்து வந்த எல்பிஜி கேஸ் ஏற்றி வந்த டேங்கர் லாரி விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது .வாயுக் கசிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
திருச்சி ஐஓசிஎல் நிறுவனத்தில் இருந்து மீட்பு வாகனம் வந்து கொண்டிருக்கிறது அதற்கு முன்பாக பம்பு மூலம் கேஸ் அகற்றுவதற்கான பணிகளுக்கு வாய்ப்பு இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து வருகிறோம் . தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் வந்து கொண்டிருக்கின்றனர்.
இந்தப் பகுதியில் இருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவு கட்டுப்பாட்டில் வைக்கபட்டு மீட்பு பணிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. வேறு பம்பை வைத்து இரண்டு மூன்று டேங்கில் நிரப்ப முயற்சிக்கிறோம். தற்போது தற்காலிகமாக வாயு கசிவை நிறுத்தி இருக்கிறோம். லாரியில் 18 டன் எல்பிஜி கேஸ் இந்த டேங்கர் லாரியில் உள்ளது. தற்காலிகமாக வாயு கசிவு நிறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் கட்டுப்பாட்டில் உள்ளது .
விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து ஒரு கிலோ சுற்றளவுக்கு போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. டேங்கர் லாரி மீட்கப்பட்ட பின்னர் பீளமேடு பகுதியில் உள்ள எல்பிஜிகுடோனுக்கு கொண்டு செல்லப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே டேங்கர் லாரி கவிழ்ந்த இடத்தில் இருந்து 500 மீட்டர் சுற்றளவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார். டேங்கர் லாரி விபத்து நடைபெற்ற இடத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் தற்காலிகமாக மின் இணைப்பு நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT