Published : 03 Jan 2025 05:28 AM
Last Updated : 03 Jan 2025 05:28 AM
சென்னை: பொங்கல் தொகுப்பு விநியோகத் துக்கான டோக்கன்கள் இன்று முதல் வீடுவீடாக வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், தொகுப்பில் வழங்கப்படும் கரும்பை தோகையுடன் வழங்கும்படியும். பொருட்களின் தரத்தை உறுதிசெய் யும்படியும் அதிகாரிகளுக்கு அமைச்சர் அர.சக்கரபாணி அறிவுறுத்தியுள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின், பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவித்துள்ளார். அதன்படி, தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை நியாய விலைக்கடைகளில் வழங்கப்பட உள்ளது. ஜன.9-ம் தேதி தொகுப்பு விநியோகம் தொடங்கப்பட உள்ள நிலையில், இதற்கான டோக்கன் விநியோகம் இன்று முதல் வீடு வீடாக வழங்கப் படுகிறது.
இந்நிலையில், இந்த தொகுப்பு, நியாயவிலைக் கடைகள் மூலம் தடையின்றி வழங்குவது குறித்தும், அத்தியாவசியப்பொருட்கள் விநியோகம் குறித்தும் உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அமைச்சர், ‘‘பொங்கல் பரிசுத் தொகுப்பில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் அனுப்பப்படும் பச்சரிசி மற்றும் சர்க்கரையின் தரத்தை உறுதி செய்ய வேண்டும், கரும்பின் தோகையை வெட்டாமல் முழு கரும்பையும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்க வேண்டும்.
இதற்காக கூட்டுறவுத்துறையினருடன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். பொதுவிநியோக அங்காடிகளில் அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு மற்றும் விநியோகத்தின் நிலையினை மாநிலம் முழுவதும் கண்காணித்து, உடனுக்குடன் குறித்த காலத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அனைத்துப் பொருட்களும் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும்.
புதிய குடும்ப அட்டைகளுக்கு விண்ணப்பித்துள்ள விண்ணப் பங்களை உடனுக்குடன் பரிசீலித்து தகுதியுள்ள விண்ணப்ப தாரர்களுக்கு, புதிய குடும்ப அட்டைகளை விரைந்து வழங்க வேண்டும்.இவ்வாறு அமைச்சர் அறிவுறுத்தினார். கூட்டத்தில், துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT