Published : 03 Jan 2025 04:53 AM
Last Updated : 03 Jan 2025 04:53 AM

கனிம மூலப்​பொருட்கள் தட்டுப்​பாட்டை தீர்க்க கட்டுநர் வல்லுநர் சங்கம் அரசுக்கு கோரிக்கை

சென்னை: கனிம மூலப் பொருட்களான மணல், ஜல்லி, எம்.சாண்ட் செங்கல் போன்றவை உற்பத்தி குறைந்து தட்டுப்பாடு ஏற்படுவதால், இதற்கு தீர்வுகாணும்படி தமிழக அரசுக்கு அகில இந்திய கட்டுநர் வல்லுநர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து, சென்னையில் அச்சங்கத்தின் முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் நேற்று கூறியதாவது: தமிழக அரசு, தொழில்துறை முதலீடுகளை ஈர்த்தும் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தியும் சிறப்பாக செயல்படுகிறது. முன் எப்போதும் இல்லாத அளவில் வளர்ச்சிப் பணிகள் தமிழகமெங்கும் நடைபெறுகிறது. அதற்கான கட்டுமானப் பணிகளை செயல்படுத்துகிறோம்.

இருப்பினும், கனிம மூலப்பொருட்களான மணல், ஜல்லி, எம்.சாண்ட் செங்கல் போன்றவை உற்பத்தி குறைந்து, தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனால், பணிகள் தேக்கமடைகின்றன. நாங்கள் ஒப்பந்தப்பணிகளை குறித்த காலத்தில் முடிக்க வேண்டியுள்ளது. மேலும், தனியார் வீடுகளும் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளும் விதிகளின்படி குறித்த காலத்தில் கட்டி முடித்து ஒப்படைக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறோம்.

பொதுப்பணித்துறையின் மணல் குவாரிகள் இயங்காததால், ஆற்று மணல் கிடைக்கவில்லை. ஆற்று மணலை பயன்படுத்தி அரசு துறையில் கட்ட வேண்டிய கட்டுமானங்கள் அனைத்தும் நின்றுவிட்டன. இதை அரசின் கவனத்துக்கு தெரியப்படுத்துகிறோம். ஆற்று மணல் கிடைக்காததாலும், கனிம மூலப்பொருட்களின் தட்டுப்பாட்டாலும் எம் சான்ட்-ன் விலை இருமடங்கு உயர்ந்துவிட்டது.

கனிம வளத்துறையின் கடுமையான நடவடிக்கையால், கல்குவாரி உரிமையாளர்கள் கிரஷரில் ஜல்லி உடைக்கும் நேரத்தை குறைந்து உள்ளனர். உற்பத்தியின் அளவு குறைந்துவிட்டது. இதனால், தேவை அதிகரித்து கனிம மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.

அரசுத்துறையின் உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களுக்கு தேவையான ஜல்லி மற்றும் எம் சான்ட் அளவை கணக்கில் கொண்டு, அரசு மற்றும் தனியார் கல்குவாரிகளுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தி, முறைப்படுத்தி கட்டுமானத்துக்கான கனிம பொருட்கள் அரசு விலைகளின்படி கிடைக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது, மாநிலத்தலைவர் பழனிவேல், பொருளாளர் பரமேஸ்வரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x