Published : 03 Jan 2025 04:14 AM
Last Updated : 03 Jan 2025 04:14 AM
மத்திய அரசின் ‘பாஷினி’ திட்டத்துடன் இணைந்து, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தொழில்நுட்பத்தின் உதவியுடன் தமிழ் மொழியின் பயன்பாட்டை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள மொழிகளின் பயன்பாட்டை மேம்படுத்த உதவும் தொழில்நுட்ப கருவிகள், செயலிகள், மென்பொருட்களை உருவாக்க ‘பாஷினி’ என்ற திட்டத்தை மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஏற்கெனவே அறிமுகம் செய்துள்ளது. இதைத் தொடர்ந்து, வாராணசியில் நடைபெற்ற ‘காசி தமிழ் சங்கமம்-2’ நிகழ்ச்சியில், ‘பாஷினி’ செயலி மூலம் பிரதமர் மோடியின் உரை, தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வழங்கப்பட்டது. இது பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், தமிழக தொழில்நுட்ப துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை ‘பாஷினி’ திட்ட குழுவின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் நாக் தலைமையிலான குழுவினர் சமீபத்தில் சென்னையில் சந்தித்து பேசினர். இதில், தமிழக அரசுக்கும், பாஷினி திட்ட குழுவுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளவும், தமிழ் இணையக் கல்விக் கழகத்துடன் இணைந்து செயல்படுவதற்கான வழிவகைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
இதுகுறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ள பதிவில், ‘பாஷினியுடன் ஒருங்கிணைந்து செயல்படும் பட்சத்தில், செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தொழில்நுட்பத்தின் உதவியுடன் தமிழ் மொழியை மேம்படுத்துவதுடன், டிஜிட்டல் உலகில் பரவலாக தமிழ் மொழியை விரிவுபடுத்தவும் முடியும் என்கிற வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT