Published : 03 Jan 2025 01:46 AM
Last Updated : 03 Jan 2025 01:46 AM

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; ஸ்பிரே, அலாரம் கருவியை வைத்துக்கொள்ள வேண்டும்: இபிஎஸ் அறிவுரை

திமுக ஆட்சியில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை. எனவே வெளியில் செல்லும்போது தற்காப்புக்காக ஸ்பிரே, அலாரம் கருவி உடன் வைத்திருக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த வாரம் அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கைது செய்யப்பட்டவர், திமுக நிர்வாகி. அவருடன் பேசிய ‘அந்த சார் யார்?’ என்பதை இதுவரை இந்த ஆட்சியாளர்கள் கண்டுபிடிக்கவில்லை. இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் அனைவரையும் கைது செய்து சட்டப்படி தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று அதிமுக சார்பில் மாநிலம் முழுவது கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டது. ‘உண்மைக் குற்றவாளியை பிடித்து சட்டத்தின் முன்

நிறுத்துவோம் என்று பாதிக்கப்பட்ட மாணவிக்கு உறுதி அளிக்காமல்’ எங்களுக்கு பதில் அளிப்பதையே சில திமுக அமைச்சர்கள் கடமையாகக் கொண்டுள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்துக்கிடையே, ராமநாதபுரத்தில் தாழ்த்தப்பட்ட பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். மேலும், சென்னை, வில்லிவாக்கத்தில் 10 வயது சிறுமி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாகவும், ஓசூரில் 80 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாகவும் வரும் செய்திகள் அனைவரையும் மிகவும் கவலையில் ஆழ்த்தியுள்ளன.

திமுக ஆட்சி இருக்கும் வரை பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இருக்காது. இந்த ஆட்சியாளர்களும், காவல் துறையினரும் பாதுகாப்பு அளிப்பார்கள் என்ற நம்பிக்கையை தமிழக மக்கள் இழந்துவிட்டார்கள். எனவே, பெண்கள் தங்களைத் தாங்களே தற்காத்துக்கொள்ள, வெளியில் செல்லும்போது தற்காப்புக்கான ஸ்பிரே, அலாரம் கருவி உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வைத்துக்கொள்ள வேண்டும். பெண்களுக்கு எதிராக இத்தனை கொடூரங்கள் நடைபெறுவதாக, தினமும் செய்திகள் வரும்போது, முதல்வர் ஸ்டாலின், மவுனமாக இருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

`பெண்களுக்கு பாதுகாப்பு அரணாகத் திகழ்கிறோம்’ என்று கூறும் அமைச்சர்கள், தமிழகத்தில் தினமும் நடைபெறும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நிகழ்வுகளை சுட்டிக்காட்டும் எங்களுக்கு பதில் அளிப்பதை விட்டுவிட்டு, பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x