Published : 03 Jan 2025 01:21 AM
Last Updated : 03 Jan 2025 01:21 AM
சென்னை: பெண் பத்திரிகையாளர்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து முகநூலில் பதிவிட்ட வழக்கில் எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட ஒருமாதசிறை தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
2018-ம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து தரக்குறைவாக விமர்சிக்கப்பட்ட பதிவை பாஜக முன்னாள் பிரமுகரும், நடிகருமான எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதையடுத்து அவர் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர் பாதுகாப்பு சங்கச் செயலாளரான மிதார் மொய்தீன் போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில் எஸ்.வி.சேகர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார், இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தடுப்புச்சட்டம் என 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதேபோல நெல்லையிலும் எஸ்.வி.சேகர் மீது வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்குகளில் முன்ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அப்போது சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவிப்பதை வாடிக்கையாக வைத்துள்ள எஸ்.வி.சேருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என பெண் பத்திரிகையாளர்கள் மற்றும் பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து, எஸ்.வி.சேகருக்கு முன்ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், இந்த விவகாரத்தில் எஸ்.வி. சேகருக்கு எவ்வித பாரபட்சமும் காட்டக்கூடாது என 2018-ம் ஆண்டு அப்போதைய அரசுக்கு உத்தரவிட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து எஸ்.வி.சேகர் தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது. அதன்பிறகும் எஸ்.வி.சேகர் கைது செய்யப்படவில்லை என்பதால் உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அதேபோல இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி எஸ்.வி.சேகர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அவருக்கு எதிரான வழக்கை 6 மாதத்தில் விசாரித்து முடிக்க சென்னையில் உள்ள எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு கடந்த 2023-ம் ஆண்டு உத்தரவிட்டது.
அதன்படி இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயவேல் கடந்தாண்டு பி்ப்ரவரியில் பிறப்பித்த உத்தரவில், எஸ்.வி.சேகருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அரசு தரப்பில் சரிவர நிரூபிக்கப்பட்டுள்ளது. தனக்கு வந்த பதிவை அப்படியே பார்வர்டு செய்தேன் என்றும், தான் குற்றமற்றவன் என்றும், இதற்காக மன்னிப்பு கோருகிறேன் என்ற அவரது தரப்பு வாதத்தை ஏற்க முடியாது. எனவே எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை மற்றும் ரூ. 15 ஆயிரம் அபராதம் விதிக்கிறேன் என தீர்ப்பளித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டதால் ஒரு மாத சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து எஸ்.வி.சேகர் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன், நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவிப்பதை மனுதாரர் வாடிக்கையாக வைத்துள்ளார் என்றும், அவர் ஒன்றும் எழுத, படிக்கத் தெரியாதவர் அல்ல என்றும், எம்எல்ஏ-வாக பதவி வகித்தவர் எனவும் தெரிவிக்கப்படும் அரசு தரப்பு வாதம் ஏற்கத்தக்கது. எனவே எஸ்.வி.சேகருக்கு ஒரு மாத சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்கிறேன் என கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தார்.
ஏற்கெனவே முன்னாள் முதல்வர் பழனிசாமி குறித்து தவறான தகவலை தெரிவித்தும், தேசியக் கொடியை அவமதிக்கும் வகையிலும் சர்ச்சைக்குரிய வீடியோ வெளியிட்டதாக 2020-ம் ஆண்டு எஸ்.வி.சேகருக்கு எதிராக பதியப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல பாஜகவில் இருந்து கொண்டே மாநில தலைவரான அண்ணாமலை உள்ளிட்டோரை விமர்சித்து வந்த எஸ்.வி.சேகர், தற்போது பாஜகவில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT