Published : 03 Jan 2025 01:13 AM
Last Updated : 03 Jan 2025 01:13 AM
சென்னை: திருநெல்வேலியில் மருத்துவக் கழிவுகளை கொட்டியவர்கள் மீது கேரள அரசு எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் சேகரமாகும் மருத்துவக் கழிவுகள், அம்மாநில எல்லையை ஒட்டிய திருநெல்வேலி மாவட்டத்தின் வனப் பகுதியான கோடகநல்லூர், பழவூர், சிவனார்குளம், கொண்டாநகரம் ஆகிய இடங்களில் கடந்த டிச.16, 17, 18-ம் தேதிகளில் கொட்டப்பட்டன. இது தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்காகப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. மேலும், அந்த கழிவுகளை 3 நாட்களில் அகற்ற வேண்டும் என்று டிச.19-ம் தேதி கேரள அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு அமர்வின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்யநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, "கழிவுகளை கொட்டிய ஒரு புற்றுநோய் மருத்துவமனை, இரு ஓட்டல்கள் ஆகியவை மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?" என அமர்வின் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு, கேரள அரசுத் தரப்பு வழக்கறிஞர், "அமர்வின் உத்தரவுப்படி, திருநெல்வேலியில் கொட்டப்பட்ட அனைத்துக் கழிவுகளும் அகற்றப்பட்டன. விதிமீறல் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவற்றின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரிய வழக்கறிஞர் சாய்சத்யஜித், ‘‘இவ்வாரியம் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில், விளக்கம் கேட்டு தொடர்புடைய நிறுவனங்களுக்கு கேரள மாசு கட்டுப்பாடு வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கேரள அரசு அதிகாரிகளே நேரில் பார்வையிட்ட நிலையில், அதன் அடிப்படையில்தான் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்க வேண்டும்" என்று வாதிட்டார்.
தொடர்ந்து, தமிழக அரசு்தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி, ‘‘திருநெல்வேலி பகுதியில் இருந்து 390 டன் மருத்துவக் கழிவுகள் மற்றும் ஓட்டல் கழிவுகள் 30 லாரி நடைகளில் அகற்றப்பட்டுள்ளன. இதற்கிடையே, களியக்காவிளை பகுதியில் வீடுகளில் உருவாகும் திடக்கழிவுகளை ஏற்றிவந்த லாரி கடந்த டிச.23-ம் தேதி பொதுமக்களால் சிறைபிடிக்கப்பட்டது. விதிமீறல் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கி, 7 நாள் அவகாசம் முடிந்த நிலையில், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நோட்டீஸ் வழங்கி இருப்பது வெறும் கண்துடைப்புதான். எனவே விதிகளை மீறும் கேரள அரசுக்கு உச்சபட்ச அபராதம் விதிக்க வேண்டும்" என்றார்.
பின்னர் அமர்வின் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், ‘‘விதிமீறலில் ஈடுபட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்பது குறித்து கேரள அளவு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். கேரள அரசின் நடவடிக்கை திருப்தியளிக்காவிட்டால், தீர்ப்பாயமே சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும். கழிவுகளை தமிழகத்தில் கொட்டுவதை கேரள அரசு நிறுத்த வேண்டும். எல்லையோர மாவட்டங்களில் சிறப்பு அதிரடிப்படையை அமைத்து கழிவுகள் கொண்டுவரப்படுவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு மீதான அடுத்த விசாரணை ஜன.20-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT