Published : 03 Jul 2018 01:48 PM
Last Updated : 03 Jul 2018 01:48 PM
சேலத்தில் பலத்த மழையில் அடித்துச் செல்லப்பட்ட 15 வயது சிறுவனின் உடல் 24 மணிநேரத்திற்கு பின் மீட்கப்பட்டுள்ளது.
சேலத்தில் ஞாயிற்றுக்கிழம்மை நள்ளிரவில் பெய்த பலத்த மழையால், நாராயண நகர் பகுதியில் ஓடையில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் இழுத்துச்செல்லப்பட்ட 15 வயது சிறுவன் முகமது ஆசாத்தின் உடலை தேடும் பணி திங்கள்கிழமை முழுவதும் தொடர்ந்து நடைபெற்றது.
ஓடைக்கு தண்ணீர் வரும் பாதையை அடைத்து, மாநகராட்சி அதிகாரிகள் மாற்றுப்பாதையில் தண்ணீரை திருப்பி விட்டனர். அதன் பிறகு மாணவன் விழுந்த இடத்தில் இருந்த தண்ணீரை வெளியேற்றி தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் திங்கள்கிழமை இரவு லேசான சாரல் மழை பெய்ததன் காரணமாக மீட்பு பணிகள் இரவுடன் முடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலையில் மீட்பு பணிகள் துவங்கிய நிலையில் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாணவன் முகமது அசாத் உடல் கிச்சிபாளையம் கருவாட்டு பாலம் பகுதியில் இருப்பதை பார்த்த பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT