Published : 02 Jan 2025 03:38 PM
Last Updated : 02 Jan 2025 03:38 PM
சென்னை: ‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி’ திட்டத்துக்கு தங்களது பங்களிப்பை தருவதாக கூறிய தனியார் பள்ளி சங்கத்துக்கு நன்றிதான் கூறினேன். இதுதெரியாமல், அரசுப் பள்ளிகளை தத்துக்கொடுத்து விட்டதாக கண்டன அறிக்கை வெளியிடுவதை வன்மையாக கண்டிக்கிறேன் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.
சென்னையில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று (ஜன.2) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையின் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து இன்று ஆலோசிக்கப்பட்டது. மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கு அடுத்த என்ன திட்டங்களை கொண்டு வரலாம், பள்ளிக் கல்வி த்துறை மறுகட்டுமானத்தில் என்ன மாதிரியான மாற்றங்களை செய்யலாம், என்பது குறித்து விவாதித்தோம்.
ஓர் அமைச்சர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் என்ன பேசப்பட்டது என்பது நிச்சயம் ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினருக்கு தெரிந்திருக்கும். ஒரு செய்தி பத்திரிகையில் வருகிறது என்றால் அது நம்பகத்தன்மையுடன் இருக்க வேண்டும். காரணம், அதில் வரும் செய்திகள் தான் உண்மை என்று நினைத்துப் படிக்கும் மக்கள் பலர் உள்ளனர். தமிழகத்தில் உள்ள பத்திரிகைகள் எல்லாம் பெரிய பெரிய புரட்சிகளை ஏற்படுத்திய பத்திரிகைகள்தான். இல்லை என்று கூறவில்லை. ஆனால், வரும் செய்திகள் உண்மையானதா இல்லையா என்பதை முதலில் பார்க்க வேண்டும்.
ஒரு செய்தி வந்தால், அதை ஒருமுறைக்கு இருமுறை சரிபார்க்க வேண்டும். நான் அப்படி பேசினேனா? நான் பங்கேற்ற விழாவில் அந்த மாதிரியான கோரிக்கை ஏதாவது வந்திருக்கிறதா? அந்த கோரிக்கையில் தத்தெடுப்பது, தாரைவார்ப்பது போன்ற தகவல் வந்ததா என்பதையெல்லாம் முழுமையாக படித்துவிட்டுத்தான் அவை செய்தியாக வர வேண்டும். தத்தெடுக்கிறார்கள், தாரை வார்க்கிறார்கள் என்று பத்திரிகைகளில் செய்திகள் வந்தவுடன். அதுசார்ந்து கண்டன அறிக்கைகள் வெளியாவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எதையும் சரிபார்க்காமல், வன்மையாக கண்டிக்கிறோம் என்று கூறுகின்றனர்.
இதனால், எங்கள் துறை சார்ந்தவர்கள் வருத்தப்படுகின்றனர். எனவே, முழுமையாக ஒரு தகவலை தெரிந்து கொள்ளாமல் கருத்து தெரிவிப்பவர்களை, பள்ளிக் கல்வித் துறை சார்பில் நான் வன்மையாக கண்டிக்கிறேன். அறிக்கை விடுபவர்கள் எங்களிடம் பேசுங்கள், நாங்கள் என்ன பேசினோம், என்ன பதிவு செய்துள்ளனர் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழக முதல்வர் ரூ.5 லட்சம் கொடுத்து ஆரம்பித்து வைத்த ‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி’ திட்டத்தின் சிஎஸ்ஆர் மூலம் இதுவரை ரூ.504 கோடி வந்துள்ளது. அதில் ரூ.350 கோடி மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த திட்டத்துக்கு தனியார் பள்ளி சங்கத்தினர் தங்களது பங்களிப்பினை தருவதாக கூறினார்கள். நான் நன்றிதான் தெரிவித்தேன். அத்துடன் அது முடிந்துவிட்டது. ஆனால், அதை தாரைவார்த்துவிட்டோம், தத்துகொடுத்துவிட்டோம் என்று பேசுகின்றனர். இது தொடர்பாக தனியார் பள்ளி சங்கத்தினர் தங்களது விளக்கத்தையும் கொடுத்துவிட்டனர். அது ஊடகம் மற்றும் பத்திரிகைகளிலும் வந்தது. ஆனால் அதன்பிறகும் அதுபோன்ற செய்தி வருவதை பள்ளிக் கல்வித் துறை சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.
எஸ்எஸ்எஸ்ஏ (SSSA) திட்டத்துக்கு நிதி வந்தபோது, நமது கொள்கையை விட்டுக்கொடுத்து அந்த பணத்தை வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்றவர் தமிழக முதல்வர். இன்றளவும் அதற்கான ரூ.500 கோடிக்கான சம்பளத்தை மாநில அரசுதான் வழங்கிக் கொண்டிருக்கிறது. அதில் ஏறத்தாழ 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், பணியாளர்கள் அடங்கியுள்ளனர். எவ்வளவு நிதிச்சுமை வந்தாலும், தமிழக மாணவர்களின் கல்வி எக்காரணம் கொண்டு தடைபட்டு விடக்கூடாது என்று கூறுபவர் தமிழக முதல்வர்.
தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையை அடுத்தடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும்போது, வரும் இதுபோன்ற செய்திகள் எங்களை அயற்சி அடையச் செய்கிறது. கல்வித் துறையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது எங்களை ஊக்கப்படுத்த வேண்டும். ஏதாவது தவறாக இருந்தால், எங்களிடம் கேட்டு சரி பாருங்கள். நாங்கள் கூறும் விளக்கம் திருப்தி அளிக்காவிட்டால், கண்டனம் தெரிவியுங்கள். விளக்கமும் கேட்காமல், நடந்தது என்னவென்றும் தெரியாமல் எதற்காக இத்தனை அவசரம் என்றுதான் எனக்கும் புரியவில்லை.
இந்த விஷயத்தை என்னவென்று தெரியாமல் பேசிக்கொண்டிருக்கும் அனைவருக்கும், நீங்கள் நினைப்பது போல அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தத்துக்கொடுப்பதோ, தாரைவார்க்க வேண்டிய அவசியமோ அரசுக்கு இல்லை. பள்ளிக் கல்வித் துறை என்பது எங்களுடைய பிள்ளை. எங்கள் பிள்ளையை நாங்கள்தான் வளர்த்தெடுப்போமே தவிர, மற்றொருவருக்கு தத்துக்கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT