Published : 02 Jan 2025 03:12 PM
Last Updated : 02 Jan 2025 03:12 PM
கோவையின் முன்னாள் மேயரும் முன்னாள் அதிமுக அமைச்சருமான செ.ம.வேலுசாமி திமுக-வில் இணையப் போவதாக அவ்வப்போது செய்திகள் கிளம்பி அடங்கும். இப்போதும் அப்படியொரு செய்தி கிளம்பி இருக்கிறது. பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயில் கும்பாபிஷேகம் டிசம்பர் 12-ம் தேதி நடைபெற்றது.
இந்த விழாவில் அமைச்சர் செந்தில்பாலாஜி பிரதானமாக இருந்தார். செ.ம.வேலுசாமியும் இந்த விழாவில் விஐபி அந்தஸ்தில் கலந்து கொண்டார். அப்போது இவரும் செந்தில்பாலாஜியும் பரஸ்பரம் சந்தித்து உரையாடியது அதிமுக, திமுக இரண்டு கட்சி மட்டத்திலுமே பேசுபொருளாகி இருக்கிறது.
2001 அதிமுக ஆட்சியில் வணிகவரித்துறை அமைச்சராக இருந்த செ.ம.வேலுசாமி, அப்போது கரூர் மாவட்டத்துக்கு பொறுப்பு அமைச்சராகவும் இருந்தார். அதனால் அப்போது, அதிமுக-வில் இருந்த செந்தில்பாலாஜியின் அரசியல் வளர்ச்சிக்கு செ.ம.வேலுசாமி முக்கிய காரணமாக இருந்தார்.
அதேபோல் இப்போது அமைச்சராக இருக்கும் செந்தில்பாலாஜி கோவைக்கு பொறுப்பு அமைச்சராக இருக்கிறார் அதிமுக-வில் கோவை மாநகர் மாவட்டச் செயலாளர், அமைச்சர், மேயர் என முக்கிய பதவிகளை வகித்தவர் செ.ம.வேலுசாமி. ஆனால், எஸ்.பி.வேலுமணி வகையறாக்கள் வந்த பிறகு செ.ம.வேலுசாமி உள்ளிட்ட சீனியர்களுக்கு முக்கியத்துவம் குறைந்து போனது. இருந்த போதும் பலபேர் கரைவேட்டியை மாற்றிக் கட்ட மனமில்லாமல் அதிமுக-விலேயே தொடர்கிறார்கள்.
இப்படியான சூழலில் தான் கோயில் கும்பாபிஷேக விழாவில் செந்தில்பாலாஜியை செ.ம.வேலுசாமி சந்தித்துப் பேசியது கவனிக்கத் தக்க விஷயமாகி இருக்கிறது.
இதுகுறித்து செ.ம.வேலுசாமியிடமே கேட்டோம். பலமாக சிரித்தவர், “மாசாணியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் நான், பொள்ளாச்சி ஜெயராமன், அமுல் கந்தசாமி உள்ளிட்ட அதிமுக-வினர் பலரும் கலந்து கொண்டோம். அமைச்சர் செந்தில்பாலாஜியும் கலந்து கொண்டார். அவர் எங்களுக்கும் சகல மரியாதை அளிக்குமாறு கோயில் நிர்வாகிகளிடம் கேட்டுக் கொண்டார்.
நான் கரூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த போதிருந்தே எனக்கும் செந்தில்பாலாஜிக்கும் அறிமுகம் உள்ளது. அவரது அரசியல் வளர்ச்சிக்கு நானும் உதவியுள்ளேன். தற்போது அமைச்சராக உள்ள அவருக்கு என் மீது தனிப்பட்ட பாசமும், விசுவாசமும் உண்டு. எங்களுக்குள் அரசியலை தாண்டிய நட்பும் உண்டு. ஆகவே, நான் அவரிடம் பேசியதை அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டியதில்லை. அப்படியே நான் அந்தப் பக்கம் போவதாக இருந்தாலும் எல்லோர் முன்பாகவா செந்தில்பாலாஜியை சந்திப்பேன்?” என்றார்.
“நானும் அவரும் நல்ல நண்பர்கள் என்று செ.ம.வேலுசாமி வெள்ளந்தியாக சொல்லலாம். ஆனால், அந்த நண்பருக்கு கொஞ்சம் இடம் கொடுத்தால் போதுமே... விவகாரமானவராச்சே” என்று கண்ணடிக்கிறார்கள் கோவை ரத்தத்தின் ரத்தங்கள்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT