Published : 02 Jan 2025 12:06 PM
Last Updated : 02 Jan 2025 12:06 PM
விழுப்புரம்: பொதுக்குழுக் கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணியும், நானும் பேசியது உட்கட்சி விவகாரம். அது சரியாகிவிட்டது. பாமக இளைஞர் சங்கத் தலைவராக முகுந்தன் பரசுராமனை அறிவித்துவிட்டோம். அவருக்கு நியமனக் கடிதமும் கொடுத்துவிட்டோம், என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (ஜன.2) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: பொதுக்குழுக் கூட்டத்தில் பேசப்படும் விஷயங்கள், உட்கட்சி விவகாரம். பொதுக்குழுக் கூட்டத்தில் ஊடகவியலாளர்களை எந்தக் கட்சியினரும் அனுமதிக்கமாட்டார்கள். அந்த கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணியும், நானும் பேசியது உட்கட்சி விவகாரம். அது சரியாகிவிட்டது. அதன்பிறகு அன்புமணி இங்கு வந்தார். அவருடன் பேசினேன், சரியாகிவிட்டது.
பொதுக்குழுக் கூட்டத்தில், பாமக இளைஞர் சங்கத் தலைவராக முகுந்தன் பரசுராமனை அறிவித்துவிட்டோம். அவருக்கு நியமனக் கடிதமும் கொடுத்துவிட்டோம். அவர் அந்தப் பதவியில் நீடிக்கிறாரா என்ற பேச்சுக்கே இடமில்லை. பொதுக்குழுவில் அறிவித்தபடி,அடுத்தநாளே அவருக்கு நியமனம் கடிதம் கொடுத்துவிட்டேன்.
பொதுக்குழுவில் நடந்த விவகாரம் பாமகவின் வளர்ச்சியை பாதிக்காது. பாமக, ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் கட்சி சார்பில் நடக்கும், பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டங்களின்போது, என்னை விமர்சியுங்கள், என்னுடைய தவறுகளை விமர்சியுங்கள் என்றுதான் கூறுவேன். நேரடியாக என்னை விமர்சிக்க தயங்குபவர்கள், தொலைபேசி வழியாக என்னிடம் பேசுங்கள் அல்லது கடிதம் எழுதுமாறு கேட்டுக் கொள்வேன். இப்போதும் அதைத்தான் கூட்டங்களில் சொல்கிறேன்.
காரணம் நான் தவறு செய்வதை சுட்டிக்காட்டினால்தான் நான் திருத்திக் கொள்வேன். நான் சொல்வதெல்லாம் சரிதான் என்று கேட்டுச் சென்றால், என் தவறும் தெரியாது நான் திருத்திக்கொள்ளவும் முடியாது.
பத்திரிகையாளர் சந்திப்புகளில் கூட எந்த கேள்வி கேட்டாலும் எனக்கு கோபம் வருவதில்லை. எதற்காக கோபம் வரவேண்டும். ஒரு கட்சியின் தலைவர் உள்ளிட்ட எந்த பதவியில் இருப்பவர்களுக்கும் பத்திரிகையாளர்கள் எந்த கேள்வி கேட்டாலும் கோபம் வரக்கூடாது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து நான் விமர்சிப்பதை, தைலாபுரத்தில் எனக்கு தைலம் வருகிறது என்று நளினமாக, நாகரிகமாக கூறுவார்.” என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT