Published : 02 Jan 2025 08:12 AM
Last Updated : 02 Jan 2025 08:12 AM
சென்னை: பால் லிட்டருக்கு ரூ.3 ஊக்கத்தொகை உற்பத்தியாளர்களின் வங்கி கணக்குக்கு நேரடியாக செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பால் வளத்துறை மற்றும் கதர்த்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் வெளியிட்ட அறிக்கை: தமிழகம் முழுவதும் கடந்த 2019-20-ம் ஆண்டில் சுமார் 23 லட்சம் லிட்டராக ஆவின் பால் விற்பனை இருந்தது. தமிழக அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கையின் காரணமாக, 2024-25-ல் சுமார் 7 லட்சம் லிட்டருக்கு மேல் அதிகரித்து தற்போது தினசரி 30 லட்சம் லிட்டர் பால் விற்கப்படுகிறது.
கடந்த 2023-ம் ஆண்டு டிச.18-ம் தேதி முதல் ஆவின் கூட்டுறவு சங்கத்துக்கு பால் வழங்கும் பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 உற்பத்தி ஊக்கத்தொகையாக பிரதம சங்கங்களின் மூலம் நிலுவையின்றி உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்நிலையில், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் நலச்சங்கத்தின் கோரிக்கையின்படி, மாவட்ட ஒன்றியத்தில் இருந்து பால் உற்பத்தியாளர்களின் வங்கி கணக்குக்கு நேரடியாக அரசு அறிவித்த ரூ.3 ஊக்கத்தொகை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. முதல்கட்டமாக, நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் மூலமாக, இந்த வாரத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து, பிற மாவட்டங்களிலும் மேற்கண்ட நடைமுறை அமல்படுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் முகமது அலி கூறும்போது, “வங்கி கணக்குக்கு நேரடியாக செலுத்தும் முறையை வரவேற்கிறோம். இதன்மூலம், தவறுகள் குறையும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT