Published : 02 Jan 2025 06:20 AM
Last Updated : 02 Jan 2025 06:20 AM
சென்னை: இசையால் மெய்மறந்த இன்பத்தைப் பெறுகிறோம் என்று மியூசிக் அகாடமியின் 98-வது விருது வழங்கும் விழாவில், பேராசிரியர் டேவிட் ஷுல்மேன் தெரிவித்துள்ளார். சென்னை மியூசிக் அகாடமியின் 98-வது விருது வழங்கும் விழா நேற்று மயிலாப்பூர் டிடிகே அரங்கில் நடைபெற்றது.
இதில் சங்கீத கலாநிதி விருதை டி.எம்.கிருஷ்ணாவுக்கும், சங்கீத கலா ஆச்சார்யா விருதை மிருங்க வித்வான் பேராசிரியர் பாரசாலா ரவி, விதூஷி கீதா ராஜா ஆகியோருக்கும், டி.டி.கே.விருதை திருவையாறு சகோதரர்களான பாகவதர்கள் எஸ்.நரசிம்மன், எஸ்.வெங்கடேசன், வித்வான் ஹெச்.கே.நரசிம்ம மூர்த்தி ஆகியோருக்கும், இசை அறிஞர் விருதை விதூஷி டாக்டர்மார்கரெட் பாஸ்டினுக்கும் பேராசிரியர் டேவிட் ஷுல்மேன் வழங்கினார்.
ரினிலேங் மனித இயல் கல்வி பேராசிரியரும், ஜெருசலம், ஹீப்ரு பல்கலைக்கழகத்தில் இந்தியக் கல்வியியல் மற்றும் சமயங்களுக்கு இடையேயான ஒப்புநோக்குகளை பயிற்றுவித்தவருமான பேராசிரியர் டேவிட் ஷுல்மேன், கலைஞர்களையும் மியூசிக் அகாடமியின் செயல்பாடுகளையும் வாழ்த்தி பேசியதாவது: முத்துசாமி தீக்ஷிதர் கமலாம்பாளைப் பற்றிய சாகித்யத்தில் ஸ்ரீசக்ர மகிமைகளைப் பாடியிருப்பார். கர்னாடக இசையில் பாரம்பரியத்துக்கும் இடம் உள்ளது.
புதுமைக்கும் இடம் உள்ளது. உயர்ந்த ரசிகானுபவத்தைக் கொடுப்பது கர்னாடக இசை. இசையால் மெய்மறந்த இன்பத்தை பெறுகிறோம். இதைத்தான் தியாகராஜரின் கீர்த்தனைகளும் நமக்கு அளிக்கின்றன. இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக வரவேற்புரை ஆற்றிய மியூசிக் அகாடமியின் தலைவர் என்.முரளி, ‘‘மியூசிக் அகாடமி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றிருக்கும் பேராசிரியர் டேவிட் ஷுல்மேன் சர்வதேச அளவில் புகழ்பெற்ற அறிஞர். பல மொழிகளில் விற்பன்னர். இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை இவர் எழுதியிருக்கிறார். மியூசிக் அகாடமியின் இந்த `சதஸ்' நிகழ்ச்சியில் பங்கெடுப்பதற்காகவே ஜெருசலேமிலிருந்து வருகை தந்ததற்கு நன்றி’’ என்றார்.
மியூசிக் அகாடமியின் சங்கீத கலாநிதி விருதைப் பெற்ற டி.எம். கிருஷ்ணாவை நாகசுர வித்வான் வியாசர்பாடி கோதண்டராமனும், சங்கீதா கலா ஆச்சார்யா விருது பெற்ற பாரசாலா ரவி, கீதா ராஜா, டி.டி.கே. விருது பெற்ற எஸ். நரசிம்மன், எஸ்.வெங்கடேசன், வித்வான் நரசிம்மமூர்த்தி, இசை அறிஞர் விருது பெற்ற விதூஷி மார்கரெட் பாஸ்டின் ஆகியோரை டாக்டர் சுபாஷிணி பார்த்தசாரதி வாழ்த்தி பேசினார். விருது பெற்ற கலைர்களின் சார்பாக கீதா ராஜா ஏற்புரை வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT