Published : 02 Jan 2025 06:04 AM
Last Updated : 02 Jan 2025 06:04 AM
சென்னை: தெற்கு ரயில்வேயில் பல்வேறு வழித்தடங்களில் ரயில் தண்டவாளத்தை மேம்படுத்தியதன் மூலமாக, 128 விரைவு மற்றும் அதிவிரைவு ரயில், பயணிகள் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த ரயில்களின் பயண நேரம் குறைந்துள்ளது.
தெற்கு ரயில்வே மண்டலத்தில் சென்னை, திருச்சி, மதுரை, திருவனந்தபுரம், சேலம், பாலக்காடு ஆகிய 6 ரயில்வே கோட்டங்கள் இருக்கின்றன. இந்த கோட்டங்களில் உள்ள முக்கிய வழித்தடங்களில் வேகத்தை அதிகரித்து, பயண நேரத்தை குறைக்க தெற்கு ரயில்வே தீவிர முயற்சி எடுத்து வருகிறது.
இதற்காக, தண்டவாளம் மற்றும் சிக்னல் முறையை மேம்படுத்தல், வேகக் கட்டுப்பாடுகளை அகற்றுதல், பாலத்தை சீரமைத்தல், ரயிலுக்கு மேல் பாலம் மற்றும் சுரங்கம் கட்டுமானப் பணிகளை செய்தல் ஆகிய பணிகளை மேற்கொண்டு வருகிறது. எல்லா பணிகளும் முடிந்து, மேம்படுத்தப்பட்ட வழித்தடங்களில் சோதனை ஓட்டம் நடத்தி, ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படுகிறது. அந்த வகையில், தெற்கு ரயில்வேயில் விரைவு மற்றும் அதிவிரைவு ரயில், பயணிகள் ரயில்கள் என 128 ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இரட்டை ரயில் பாதை: கன்னியாகுமரி - நிஜாமுதீன் விரைவு ரயில் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் தமிழகத்தில் இயக்கப்படுகிறது. இதனால், இந்த ரயிலின் பயண நேரம் 80 நிமிடம் வரை குறைந்துள்ளது. இதுதவிர, நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை, போடிநாயக்கனூர், செங்கோட்டை ஆகிய நகரங்களுடன் சென்னையை இணைக்கும் விரைவு ரயில்களின் பயண நேரம் 30 நிமிடங்கள் வரை குறைந்துள்ளது.
திருவண்ணாமலை போன்ற சென்னைக்கு அருகிலுள்ள மாவட்டங்களுடன் இணைக்கும் பயணிகள் ரயில்களின் பயண நேரம் 10 முதல் 15 நிமிடங்கள் வரை குறைந்துள்ளது. தமிழகத்தில் திருச்சி - கரூர், காரைக்குடி- விருதுநகர், பாலக்காடு - நிலாம்பூர் ஆகிய முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும் பயணிகள் ரயில் வேகம் அதிகரித்து, பயண நேரம் சிறிது குறைந்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், "ரயில் தண்டவாளம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதுதவிர, இரட்டை ரயில் பாதை கன்னியாகுமரி வரை அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ரயில்களின் வேகம் அதிகரித்து, பயண நேரம் குறைந்து வருகிறது" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT