Published : 02 Jul 2018 10:05 AM
Last Updated : 02 Jul 2018 10:05 AM
காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கம் அமைந்துள்ளது. இங்கு நீச்சல், கூடைப்பந்து, இறகுப்பந்து, மேசைப்பந்து விளையாட்டு அரங்குகள் மற்றும் உடற்பயிற்சி அரங்கம் ஆகியவை உள்ளன. மேலும், ஹாக்கி, மட்டைப்பந்து, கால்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பயிற்சிகள் நடைபெறும்.
இதுதவிர, நகரப் பகுதி மக்கள் அதிகாலையில் நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், காவலர் மற்றும் ராணுவத்துக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான பயிற்சிகளும் நடைபெற்று வருகின்றன.
இந்த விளையாட்டு அரங்கத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பார்வையாளர்கள் அமரும் பகுதி மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால், அக்கட்டிடத்தை அகற்றி புதிய கட்டிடத்துடன் விளையாட்டு அரங்கத்தை புதுப்பிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதன்பேரில், மாவட்ட விளையாட்டு அரங்கை நவீன வசதிகளுடன் புதுப்பிக்க தமிழக அரசு ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் கூறும்போது, “மழைக்காலத்தில் விளையாட்டு அரங்கத்தில் மழைநீர் தேங்குவதால், சுமார் 2 அடி உயரத்துக்கு மண் கொட்டி உயர்த்தப்பட உள்ளது. மேலும், புதிய பார்வையாளர் கேலரி மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. அதனால், பணிகளில் இடையூறு ஏற்படாமல் இருப்பதற்காகவும் பாதுகாப்பு கருதியும் விளையாட்டு அரங்கம் மூடப்படுகிறது. பணிகளை நிறைவு செய்ய 18 மாதங்களாகும் என தெரிகிறது. அதுவரை, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலகம் விளையாட்டு அரங்கத்தில் உள்ள சிறிய கட்டிடத்தில் வழக்கம் போல் இயங்கும்” என்றார்.
விளையாட்டு வீரர்கள் மற்றும் இளைஞர்கள் கூறும்போது, “விளையாட்டு அரங்கம் புதுப்பிக்கப்படுவது வரவேற்கத்தக்கது. ஆனால், பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், விளையாட்டு வீரர்களுக்கான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தி, அதிகளவில் மரக்கன்றுகளை நட வேண்டும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT