Published : 01 Jan 2025 03:46 PM
Last Updated : 01 Jan 2025 03:46 PM
ஆவடியில் 30 ஆண்டுகளாக பாழடைந்த கட்டிடத்தில் இயங்கி வரும் நூலகம், புதிய கட்டிடத்துக்கு மாற்றப்படுகிறது. இதனால், வாசகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னையை அடுத்த ஆவடி மார்க்கெட், காந்தி சிலை அருகே 25 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த நூலகம், கட்டிடம் சேதம் அடைந்த காரணத்தால், ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் உள்ள வணிக வளாகத்தில் கடந்த 1995-ம் ஆண்டு மாற்றப்பட்டது.
இந்த நூலகத்தில் 62 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. சுமார் 6,500 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். தினசரி 250-க்கும் மேற்பட்ட வாசகர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, போட்டித் தேர்வுக்கு தயாராகும் ஏராளமான இளைஞர்கள் இந்த நூலகத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, நூலகம் செயல்பட்டு வரும் வணிக வளாக கட்டிடம் போதிய பராமரிப்பு இல்லாததால் சேதம் அடைந்தது. மழைக் காலத்தில் மழைநீர் கசிந்து நூல்கள் சேதம் அடையும் நிலை ஏற்பட்டது. அத்துடன், முதல் மாடியில் இந்த நூலகம் செயல்பட்டதால், முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் மாடி ஏறி செல்ல மிகவும் சிரமப்பட்டனர். மேலும், இக்கட்டிடத்தில் போதிய மின்விளக்கு வசதி இல்லாததால் மாலை நேரத்தில் பெண்கள் நூலகத்துக்கு செல்ல அச்சப்பட்டனர்.
அத்துடன், போதிய கழிவறை, குடிநீர் வசதி இல்லாததால், நூலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களும், நூலகத்துக்கு வரும் வாசகர்களும் பெரும் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில், இந்நூலகத்தின் 30 ஆண்டுகால பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது. இதன்படி, ஆவடி, காமராஜ் நகர், 4-வது தெருவில் உள்ள பருத்திப்பட்டு பசுமைப் பூங்காவில் உள்ள கட்டிடத்தில் இந்நூலகம் மாற்றப்பட உள்ளது.
இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட நூலகர் (முழு கூடுதல் பொறுப்பு) முனைவர் எம்.கவிதா ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: நூலக கட்டிடத்தை கடந்த நவம்பர் மாதம் பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஆய்வு செய்தபோது உடனடியாக இந்த நூலகத்தை வேறு கட்டிடத்துக்கு மாற்றும்படி அறிவுறுத்தினார். இதையடுத்து, மாவட்ட ஆட்சியர், ஆவடி மாநகராட்சி ஆணையர் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து, தற்போது ஆவடி, பருத்திப்பட்டு பசுமைப் பூங்காவில் நூலகத்துக்கு கட்டிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
2 தளங்கள் கொண்ட இக்கட்டிடத்தில் தரை தளத்தில் பொதுமக்கள் வந்து படிப்பதற்கான வசதியும், முதல் தளத்தில் போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் படிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படும். இவை தவிர, குழந்தைகள் படிப்பதற்கும், பார்வைத் திறன் குன்றியவர்களுக்கு ‘பிரெய்லி’ முறையில் ஆடியோ வடிவிலான புத்தகங்கள், டிஜிட்டல் முறையில் படிப்பதற்கு வசதியாக 8 கணினிகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும். பூர்வாங்க பணிகள் அனைத்தும் முடிந்ததும், பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விரைவில் நூலகம் திறக்கப்படும். காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நூலகம் செயல்படும். இவ்வாறு கவிதா தெரிவித்தார்.
இதற்கிடையே, இந்த நூலகத்துக்கு நிரந்தர கட்டிடம் கட்ட வேண்டும் என 37 ஆண்டுகளாக போராடி வரும் சமூக ஆர்வலர் ஏ.தரணிதரன் கூறுகையில், ‘இந்த நூலகத்துக்கு 2010 முதல் 2020 வரையிலான 10 ஆண்டுகளில் மட்டும் நூலக வரித் தொகையாக சுமார் ரூ.6 கோடி வசூல் ஆகியுள்ளது. எனவே, இந்த நூலகத்துக்கு இனியும் காலம் தாழ்த்தாமல் சொந்த கட்டிடம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT