Published : 01 Jan 2025 03:54 PM
Last Updated : 01 Jan 2025 03:54 PM

டிபிஐ வளாகத்தில் பொதுக் கழிப்பறை இல்லை!

ஏராளமான அரசுத்​ துறை தலைமை அலுவல​கங்கள் இயங்கி வரும் டிபிஐ வளாகத்​தில் பொதுக் கழிப்பறை வசதி இல்லாதது, அங்கு வரும் பொது​மக்​களுக்கு பெரும் சங்கடமாக இருந்து வருகிறது. சென்னை நுங்​கம்​பாக்கம் கல்லூரிச் சாலை​யில் அமைந்​துள்ளது டிபிஐ வளாகம். தற்போது அதன் பெயர் பேராசிரியர் அன்பழகன் வளாகம் என மாற்​றப்​பட்​டுள்​ளது. இங்கு அரசுத்​துறை​களின் தலைமை அலுவல​கங்கள் பல இயங்கி வருகின்றன.

பள்ளிக்​கல்வி இயக்​குநர் அலுவல​கம், தொடக்கக் கல்வி இயக்​குநர் அலுவல​கம், மாநில கல்வி​யியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்​குநர் அலுவல​கம், ஆசிரியர் தேர்வு வாரி​யம், தனியார் பள்ளிகள் இயக்​குநர் அலுவல​கம், அரசு தேர்​வுத்​துறை இயக்குநர் அலுவல​கம், பள்ளிசாரா கல்வி மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்​குநர் அலுவல​கம், ஒருங்​கிணைந்த பள்ளிக்​கல்வி (எஸ்​எஸ்ஏ) மாநில திட்ட இயக்​குநர் அலுவல​கம், தமிழ்​நாடு பாடநூல் மற்றம் கல்வி​யியல் பணிகள் கழகம், மாநில பெற்​றோர் ஆசிரியர் கழகம் என பள்ளிக்​ கல்​வித்​துறை தொடர்பான அனைத்து தலைமை அலுவல​கங்​களும் இந்த வளாகத்​தில்​தான் உள்ளன.

மேலும், மத்திய அரசின் பணியாளர் தேர்​வாணையம் (எஸ்​எஸ்​சி), சிபிஐ தென்​மண்டல அலுவல​கம், மத்திய வெளி​யுறவு அமைச்சக கிளைச் செயல​கம், இந்தியன் ஓவர்​சீஸ் வங்கி என பல்வேறு மத்திய அரசு அலுவல​கங்​களும் அமைந்​துள்ளன. இந்த அரசு அலுவல​கங்​களில் 100-க்​கும் மேற்​பட்ட அலுவலர்​கள், ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்​கள்.

பல்வேறு பணிகளுக்காக தினமும் இந்த வளாகத்​துக்கு ஏராளமான பொது​மக்கள் வந்து செல்​கின்​றனர். வேலைநாட்​களில் தினமும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள டிபிஐ வளாகத்​தில் பொது கழிப்பறை வசதி இல்லாதது பெருங்​குறையாக இருந்து வருகிறது.

அரசு அலுவலகங்கள் இயங்கி வரும் ஈவிகே சம்பத் மாளிகை, எம்ஜிஆர் நூற்​றாண்டு விழா கட்டிடம், எஸ்எஸ்இ கட்டிடம், மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன கட்டிடம் உள்ளிட்​ட​வற்றில் அந்தந்த அரசு அலுவல​கங்​களுக்கென தனியாக கழிப்பறை வசதிகள் உள்ளன. ஆனால், டிபிஐ வளாகத்​துக்கு வரும் பொது​மக்​களின் பயன்​பாட்டுக்காக பொதுக்​கழிப்பறை வசதி இல்லை. ஒருசில அரசு அலுவல​கங்​களில் உள்ள தனி கழிப்​பறைகளை மட்டும் பொது​மக்கள் பயன்​படுத்த முடிகிறது.

ஒருசில அலுவல​கங்​களில் உள்ள கழிப்​பறைகளை அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மட்டுமே பயன்​படுத்த முடி​யும். அவற்றை பொது​மக்கள் பயன்​படுத்த அனும​திப்​ப​தில்லை. பணிநிமித்​தமாக வெளியூர்​களில் இருந்து வரும் ஆசிரியர்​கள், ஊழியர்கள் மற்றும் பொது​மக்கள் காலை​யில் வந்தால் வேலையை முடித்து​விட்டு புறப்பட அரைநாள் ஆகிவிடு​கிறது. எனவே, பொதுக் கழிப்பறை வசதி இல்லாத​தால் அவர்கள் மிகவும் சிரமத்​துக்கு உள்ளாகின்​றனர்.

இதுகுறித்து டிபிஐ வளாகத்​துக்கு வரும் ஆசிரியர்கள் மற்றும் பொது​மக்கள் கூறும்​போது, “இங்கு பொது கழிப்பறை வசதி இல்லாதது மிகவும் சிரமமாக இருக்​கிறது. தினமும் பொது​மக்கள் அதிக எண்ணிக்கை​யில் வந்துசெல்​லக்​கூடிய ஒரு வளாகத்​தில் பொது கழிப்பறை வசதி ஏற்படுத்​தப்​படாதது ஆச்சரியமாக உள்ளது. ஆண்கள் ஒதுக்​குப்பு​றமாக உள்ள இடத்​தில் சிறுநீர் கழித்து எப்படியோ சமாளித்​துக் கொள்​கிறார்​கள். ஆனால், பெண்​களின் நிலை​மை​தான் மிகவும் பரிதாபம். டிபிஐ வளாகத்​தில் காலியான இடங்கள் நிறைய உள்ளன.

எனவே, பொது கழிப்பறை கட்டு​வ​தில் எவ்வித பிரச்​சினை​யும் இருக்​காது. எனவே, பொது​மக்​களின் நலனை கருத்​தில்​கொண்டு டிபிஐ வளாகத்​தில் பொதுக் கழிப்பறை வச​தியை ஏற்​படுத்த சம்​பந்​தப்​பட்ட அரசு துறை அதிகாரி​கள் ​விரைந்து நட​வடிக்கை எடுக்க வேண்​டும். பராமரிப்பு பணிக்காக தேவைப்​பட்​டால் குறைந்த கட்​ட​ணம் கூட வசூலித்​துக் ​கொள்​ளலாம்​” என்​று தெரிவித்தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x