Published : 01 Jan 2025 04:50 PM
Last Updated : 01 Jan 2025 04:50 PM

அன்புமணி - ராமதாஸ் மோதல்... பகை மூட்டியது பாஜக கூட்டணி முடிவா?

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசுக்கும் தலைவர் அன்புமணி ராமதாசுக்கும் இடையில் வெடித்த மோதல் உடனடியாக முடிவுக்கு வந்துள்ள நிலையில், 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக-வுடன் கூட்டணி என அன்புமணி முடிவெடுத்ததிலிருந்தே இருவருக்குமான பனிப்போர் தொடங்கிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

தேர்தல் அரசியலுக்கு வந்தது முதலே சட்டமன்​றத்​தி​லும், மக்களவை​யிலும் பாமக-வுக்கான பிரதி​நி​தித்துவம் இருக்​குமாறு பார்த்துக் கொள்வார் ராமதாஸ். தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணியை மாற்றுவதாக வரும் விமர்​சனங்களை எல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் கட்சியை அடுத்​தகட்​டத்​துக்கு நகர்த்து​வ​திலேயே குறியாக இருந்தார் ராமதாஸ்.

ஆனால், அன்புமணியின் விருப்​பத்தில் 2014-ல் பாஜக-வுடன் கூட்டணி வைத்தது பாமக. அப்போது தருமபுரியில் அன்புமணி மட்டும் வென்றார். 2016-ல் தனித்துக் களம் கண்டு படுதோல்வியை சந்தித்தது பாமக. கட்சி தொடங்​கியது முதல் சட்டமன்​றத்தில் பாமக-வின் பிரதி​நி​தித்துவம் இல்லாமல் போனது 2016-ல் மட்டும்​தான்.

இதனால், ‘பழைய கசப்புகளை’ எல்லாம் மறந்து​விட்டு 2019-ல் அதிமுக கூட்டணியை புதுப்​பித்தார் ராமதாஸ். அதற்கு அரைமன
தோடு சம்மதித்தார் அன்புமணி. அந்தத் தேர்தலில் தோல்வியை தழுவி​னாலும் அன்புமணிக்கு ராஜ்யசபா எம்பி பதவி கிடைத்தது. 2021 தேர்தலிலும் அதிமுக கூட்ட​ணியில் தொடர்ந்து 5 தொகுதி​களில் வென்றது பாமக.

இந்தச் சூழலில் 2024-ல் பாஜக உறவை முறித்தது அதிமுக. அப்போது அதிமுக-வுடன் கூட்டணி வைக்க முடிவெடுத்தார் ராமதாஸ். இதற்கான பேச்சு​வார்த்​தைகளும் சி.வி.சண்​முகம் மூலம் நடந்தது. தொகுதிகள் விஷயத்தில் முதலில் முரண்​டு​பிடித்த அதிமுக, பின்னர் பாமக கேட்கும் தொகுதி​களையும் கொடுக்க முன்வந்தது. ராஜ்யசபா சீட்டுக்கும் ஒத்துக்​கொண்டதாக சொல்லப்​பட்டது. அதிமுக – பாமக கூட்டணி உறுதி​யாகி​விட்டதாக செய்திகள் கூட வந்தது.

அப்போது​தான், டெல்லி ‘டீலை’ தொடர்ந்து திடீரென பாஜக-வுடன் கூட்டணி என அறிவித்தார் அன்புமணி. இது அப்போதே ராமதாஸ் மனதுக்கு ஒப்பவில்லை. இருந்​தா​லும், பாஜக கூட்டணி வெல்லும், மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என்றெல்லாம் அன்புமணி சமாதானம் செய்ததாக சொல்லப்​படு​கிறது.

ஆனாலும், அந்த தேர்தலில் பாஜக கூட்ட​ணியால் ஒரு தொகுதி​யிலும் வெல்ல முடிய​வில்லை. நூலிழையில் வெற்றியை நழுவவிட்ட சௌமியா அன்புமணியை தவிர பாமக வேட்பாளர்கள் யாராலும் இரண்டாம் இடம்கூட பிடிக்க முடிய​வில்லை. கள்ளக்​குறிச்​சியில் நான்காம் இடத்துக்குப் போனது பாமக. இந்த முடிவுகள் ராமதாஸை அதிர்ச்​சியில் உறையவைத்தது.

அதிமுக பக்கம் போயிருந்தால் தருமபுரி உட்பட சில தொகுதி​களில் வென்றிருக்​கலாம். ராஜ்யசபா சீட்டையும் பெற்றிருக்​கலாம் என்பது ராமதாஸின் ஆதங்கம். அப்படி உள்ளுக்குள் கனன்று கொண்டிருந்த கோபமே இப்போது வெடித்​துள்ள​தாகச் சொல்கிறார்கள். தொடர் தோல்வி​களால் தொண்டர்கள் துவண்​டு​போ​யுள்​ளனர். இதே நிலை நீடிப்பது கட்சிக்கு நல்லதல்ல.

எனவே 2026 தேர்தலை கவனமாக அணுகவேண்​டும். வெற்றி​பெறும் அணியில் இருக்க வேண்டும் என நினைக்​கிறார் ராமதாஸ், அதற்கு அச்சாரமே இந்த மோதல். டெல்லி கனவில் தமிழகத்தில் கோட்டை விட்டு விடக்​கூடாது என்ற எச்சரிக்கை​யில்தான் அன்புமணிக்கே சவால் விட்டிருக்​கிறார் அவர்.

தலைவர் என்ற முறையில் கட்சி இப்போது அன்புமணியின் கட்டுப்​பாட்​டில்தான் உள்ளது. ஆனாலும், பாமக-வின் ஐகான் ‘அய்யா ராமதாஸ்’ தான். அதுபோக, அய்யா வழியோ, சின்னய்யா வழியோ நமக்கு தேவை வெற்றி என்பதே ​பாட்​டாளி​களின் எண்ணம். என்ன செய்​கிறார்கள்​ என ​பார்​ப்​போம்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x