Published : 01 Jan 2025 03:49 AM
Last Updated : 01 Jan 2025 03:49 AM
சென்னை: உலகம் முழுவதும் இன்று (ஜனவரி 1) ஆங்கில புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. புத்தாண்டையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக நேற்று அவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்: விடுதலை இந்திய வரலாற்றில் ஜனநாயகத்தை பாதுகாத்து நாட்டின் பெருமையை நிலைநாட்ட, தமிழக மக்கள் அளித்த வெற்றிக்குரிய 2024-ம் ஆண்டு, மறக்க முடியாத ஆண்டாக அமைந்துவிட்டது. சோதனைகள் மற்றும் தடங்கல்களை கடந்து சாதனைகள் படைக்கவும், வெற்றிபெறவுமான நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளித்தது 2024-ம் ஆண்டு. புத்தாண்டாகிய 2025-ல் உலகெங்கும் அமைதி திரும்பட்டும். நம் நாட்டில் சமூக நல்லிணக்கம் தழைத்துச் செழித்தோங்கட்டும். இல்லந்தோறும் அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கட்டும். தமிழகம் அதற்கு வழிகாட்டும். அனைவருக்கும் எனது உளம் நிறைந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
அதிமுக பொதுச்செயலாளர் கே.பழனிசாமி: தமிழ்நாட்டில் அனைத்து நிலைகளிலும் வாழும் மக்கள் நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்துவதற்கு, நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்போம். மக்கள் அனைவருக்கும் இந்த புத்தாண்டு, புதிய நம்பிக்கையையும், எழுச்சியையும், மலர்ச்சியையும், வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: புத்தாண்டு அனைத்து மக்களின் வாழ்க்கையை வளமாக்கும் ஆண்டாக, துன்பங்கள் கரைந்து இன்பங்கள் நிறையும் ஆண்டாக மாற்றத்தை உருவாக்கும் ஆண்டாக மலரட்டும்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை: 2025 ஆங்கில புத்தாண்டில் இந்தியாவில் ஜனநாயகம் தழைக்கவும், மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்கிற வகையிலும், மக்களின் வாழ்வு ஏற்றம் பெற்று, ஒளிமயமான எதிர்காலம் அமைய அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: நம் தமிழக மக்கள், திமுக ஆட்சி அவலத்தின் இருட்டிலிருந்து மீண்டு வருவார்கள் என்ற நம்பிக்கையோடும், பல கனவுகளோடும், எதிர்பார்ப்புகளோடும், புத்தாண்டை எதிர்கொள்கிறோம். நம்முடைய தேர்வு, நமக்கானது மட்டுமின்றி, நம் அடுத்தடுத்த தலைமுறைகளுக்குமானது என்பதை நினைவில் கொண்டு, நல்லவற்றையே தேர்ந்தெடுப்போம்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: 2025-ம் ஆண்டு நாம் எதிர்பார்த்ததைப் போலவே இனிப்பாக அமையும். அனைவருக்கும் அனைத்து நலன்களும் கிடைக்கும். பொருளாதாரம் வளரும், மகிழ்ச்சி பெருகும். அமைதியும், நிம்மதியும் கிடைக்கும். அவற்றை சாதிக்க கடுமையாக உழைப்போம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: சமத்துவ சமூகம் மலர்வதற்கான ஒரு புதிய பாதையை அமைக்கவும் அதற்கு எதிரான அனைத்து தடைகளை தகர்க்கவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த புத்தாண்டில் சபதம் ஏற்போம்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் உறுதியாக நின்று தமிழகத்தைப் பாதுகாக்க சூளுரைப்போம். தமிழக மக்களுக்கு, உலகுவாழ் தமிழர்களுக்கு ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
விசிக தலைவர் திருமாவளவன்: ஜனநாயகம் தழைத்தோங்கும் ஒரு புதிய ஆண்டாக மலரட்டும். சாதி, மத அடிப்படையிலான வெறுப்பு அரசியலே இல்லாது ஒழியட்டும்
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: வகுப்பு வாத சக்திகளை அரசியல் அதிகாரத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதில் 2025ம் ஆண்டிலும் முனைப்புடன் செயல்பட உறுதி ஏற்போம்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்: உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், ஆகிய மூன்றும் தமிழக மக்கள் அனைவருக்கும் உறுதியாக கிடைக்க வேண்டும். 2025-ம் ஆண்டு அனைவருக்கும் இன்பம் பொங்கும் ஆண்டாக அமைய வேண்டும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: புத்தாண்டில் அனைவரும் நலமுடன், வளமுடன், மகிழ்ச்சியுடன் வாழ இறைவனும், இயற்கையும் துணை நிற்க வேண்டும்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: உதயமாகும் புத்தாண்டு நிறைவான வளத்தையும், குறையாத மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும் ஆண்டாக மட்டுமின்றி மனிதநேயமும், மதநல்லிணக்கமும் தழைத்தோங்கும் ஆண்டாகவும் அமையட்டும்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்: இந்த புத்தாண்டு அறிவையும், ஆற்றலையும் மேம்படுத்தட்டும். புத்தாண்டில் நமது கனவுகள் நனவாகட்டும்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி: பிறக்கும் புத்தாண்டு ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்ற சமூகநீதி வளரும் புத்தாண்டாக, வலிவும், பொலிவும் ஆன வாழ்க்கையாக, சுயமரியாதை வாழ்வாக அமையட்டும்.
மேலும், புதுச்சேரி மற்றும் தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், பாமக தலைவர் அன்புமணி, பாஜக பிரமுகர் ஆர்.சரத்குமார், ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து, இந்திய கிறிஸ்தவ மதச்சார்பற்ற கட்சியின் தலைவர் எம்.எஸ்.மார்டின், தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி நிறுவன தலைவர் விஎம்எஸ் முஸ்தபா உள்ளிட்ட தலைவர்களும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT