Published : 31 Dec 2024 07:55 PM
Last Updated : 31 Dec 2024 07:55 PM
சென்னை: “போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய பேச்சுவார்த்தையை தாமதப்படுத்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மரணத்தை அரசு பயன்படுத்துகிறதா?” என சிஐடியு கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன (சிஐடியு) பொதுச்செயலாளர் கே.ஆறுமுகநயினார் விடுத்த அறிக்கையில், “போக்குவரத்து ஊழியர்களுக்கான கடந்த பேச்சுவார்த்தையும் ஊதிய ஒப்பந்தம் முடியும் காலத்தில் தான் பேசப்பட்டது. அந்த ஒப்பந்தம் முந்தைய ஆண்டு ஆக.31-ம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. புதிய ஒப்பந்தத்தை உருவாக்க அரசு உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து பேச்சுவார்த்தை அறிவிக்கப்பட்ட நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானதால் அதுவும் ஒத்திவைக்கப்பட்டது.
இதையொட்டி, ஒரு வாரம் துக்கம் அனுசரிப்பதாக அறிவித்த அரசு, போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய பேச்சுவார்த்தையை தவிர அரசு நிகழ்ச்சிகள், விழாக்களை நடத்தி வருகிறது. ஊதிய பேச்சுவார்த்தையை காலதாமதப்படுத்த மன்மோகன் சிங் மரணத்தை அரசு பயன்படுத்துகிறதோ என்ற சந்தேம் தொழிலாளர் மத்தியில் எழுந்துள்ளது. அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி, ஜனவரி இறுதிக்குள் பேச்சுவார்த்தையை முடிக்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன.9-ல் திட்டமிட்டபடி பல்லவன் சாலையில் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜன் தலைமையில் தர்ணா நடைபெறும்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT