Published : 31 Dec 2024 04:29 PM
Last Updated : 31 Dec 2024 04:29 PM
சென்னை: “சென்னை அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில், உண்மைக் குற்றவாளி தப்பிவிடாமல், மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே ‘யார் அந்த சார்’ போராட்டத்தை அதிமுக முன்னெடுத்து வருகிறது” என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை அதிமுக தலைமையகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (டிச.31) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “அண்ணா பல்கலைக்கழ மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு இந்திய அளவில் பேசுபொருளாகி உள்ளது. இவ்வழக்கு தொடர்பாக பல்வேறு முரண்பட்ட கருத்துகள், பத்திரிகைகள், ஊடகங்களிலும் செய்திகளாக வெளிவந்து கொண்டேயிருக்கிறது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட மாணவி கொடுத்த புகார் ஊடகம் மற்றும் பத்திரிகை வாயிலாக வெளியே வந்தது எப்படி? இதுவொரு தவறான முன்னுதாரணம் ஆகிவிட்டது. இது சட்டத்துக்குப் புறம்பானது.
எந்தவொரு எஃப்ஐஆரையும் வெளியிடக் கூடாது என்பதே சட்டத்தின் அம்சம். ஆனால், பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர் வெளியே கசிந்துவிட்டதாக பரவலாக செய்திகள் வந்தன. அப்படி வந்த செய்திகளில், பாதிக்கப்பட்ட மாணவி, “அந்த சார் உடன் கொஞ்சம் நேரம் இரு”, என்று இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் கூறியதாக செய்திகளில் தகவல் வெளியாகி இருந்தது.
“யார் அந்த சார்?” என்று மக்கள் கேட்கிறார்கள். இந்த வழக்கில் இருந்து குற்றவாளி தப்பித்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் அதிமுக முன்நின்று இந்தப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. அதிமுகவின் நோக்கம் இந்த வழக்கில் உண்மை குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும். ‘யார் அந்த சார்?’ என்ற கேள்விக்கு காவல் துறையிடம் இருந்து இன்னும் பதில் வரவில்லை.
காவல் துறை உயரதிகாரி, கட்டுப்பாட்டு அறையில் இருந்து எங்களுக்கு போன் வந்தது. அந்த புகாரின் அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சென்றோம். பாதிக்கப்பட்ட பெண்ணும், பேராசிரியர் ஒருவரும் சேர்ந்து இந்த புகாரை அளித்ததாக, காவல் துறை ஆணையர் கூறுகிறார். அடுத்த நாள் உயர் கல்வித் துறை அமைச்சர், ஆணையர் கூறியதை மறுக்கிறார். எனவே, இதுபோன்ற சந்தேகங்கள் நிலவுகிறது. எனவே, உண்மைக் குற்றவாளி தப்பிவிடாமல், மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக அதிமுக போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது.
அதிமுக ஐ.டி விங்க் நிர்வாகிகள், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், உண்மைக் குற்றவாளியை நாட்டுக்கு அடையாளம் காட்ட வேண்டும் என்ற அடிப்படையில் ‘யார் அந்த சார்?’ என்ற பதாகைகளை ஏந்தி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது. நாங்கள் யார் பெயரையும் குறிப்பிடவில்லை. இதில் என்ன தவறு இருக்கிறது? எனவே, ‘யார் அந்த சார்?’ என்பதை காவல் துறை கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு,” என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT