Last Updated : 31 Dec, 2024 03:55 PM

 

Published : 31 Dec 2024 03:55 PM
Last Updated : 31 Dec 2024 03:55 PM

‘6 தொகுதிகளையும் வென்றாக வேண்டும்!’ - தூத்துக்குடி திமுகவினருக்கு அழுத்தமாக ஆணையிட்ட முதல்வர்

அரசு நிகழ்ச்சிகளுக்காக இரண்டு நாள் பயணமாக ஞாயிற்றுக் கிழமை தூத்துக்குடி வந்த முதல்வர் ஸ்டாலின், அப்படியே மாவட்ட திமுக-வினரையும் சந்தித்து தேர்தலுக்கு தயாராவது குறித்து புள்ளி விவரங்களை கையில் வைத்துக் கொண்டு பேசிச் சென்றிருக்கிறார்.

2026-ல் 200 தொகுதி​களில் திமுக கூட்டணி வெல்ல வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்​டாலின் இலக்கு நிர்ண​யித்​துள்ளார். வென்றே ஆகவேண்டிய கட்டா​யத்தில் இருக்கும் அதிமுக-வும் ஆட்சிக்கு எதிரான போராட்​டங்களை முன்னெடுத்​துள்ளது.

இவர்களுக்கு மத்தி​யில், பாஜக தலைவர் அண்ணா​மலையும் சாட்டையும் கையுமாக ஆட்சியைப் பிடிக்கும் உத்திகளை கையாண்டு வருகிறார். திமுக ஆட்சியை அகற்றும் வரை காலில் செருப்பு அணியமாட்டேன் என அவர் செய்திருக்கும் சபதத்தை, “அப்படி​யானால் வாழ்நாளில் இனி அண்ணாமலை செருப்பு அணியவே முடியாது” என பரிகாசம் செய்கிறது திமுக.

இப்படியான சூழலில், ஞாயிற்றுக் கிழமை தூத்துக்குடி வடக்கு, தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார் முதல்வர் ஸ்டாலின். கனிமொழி எம்பி, அமைச்​சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் உட்பட மொத்தமே 172 நிர்வாகி​களுக்கு மட்டுமே இந்தக் கூட்டத்தில் கலந்து​கொள்ள அனுமதி அளிக்​கப்​பட்​டிருந்தது.

சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்​தில், கடந்த 5 தேர்தல்​களின் முடிவுகளை புள்ளி​விவரத்​துடன் கையில் வைத்துக் கொண்டு பேசினார் முதல்வர். எந்தெந்த தேர்தல்​களில், எந்தெந்த தொகுதி​களில் திமுக குறைவான வாக்குகள் பெற்றிருக்​கிறது என்பதை சுட்டிக்​காட்டி, அதற்கான காரணங்களை சம்பந்​தப்பட்ட கட்சி நிர்வாகி​களிடம் அவர் துருவி​னார்.

2021 சட்டப்​பேரவை தேர்தலில் கோவில்​பட்டி தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் மூன்றாம் இடத்துக்கு சென்றது குறித்து வருத்​தப்பட்ட முதல்வர், “இந்தத் தேர்தலில் அப்படியான நிலை எதுவும் வரக்கூ​டாது” என அழுத்தமாக ஆணையிட்​டார். “இந்த மாவட்​டத்தில் உள்ள 6 தொகுதி​களையும் இம்முறை நாம் வென்றாக வேண்டும். கட்சி நிர்வாகிகள் தங்களுக்குள் இருக்கும் வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையாக பணியாற்றி திமுக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

2026 மிக முக்கியமான தேர்தல். இதில் நிச்சயமாக நாம் 200 தொகுதிகளை வென்றாக வேண்டும். அதற்கான பணிகளை கட்சி நிர்வாகிகள் செய்ய வேண்டும். நமது அரசின் சாதனை திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்” என்று சொல்லி​விட்டுப் புறப்​பட்டார் முதல்வர்.

இம்முறை தன்னோடு புகைக்​கப்படம் எடுக்க விருப்​பப்பட்ட நிர்வாகி​களு​டன் பொறுமையாக நின்று போட்டோ எடுத்துக் கொண்டார் முதல்வர். இரண்டு நாள் நிகழ்ச்​சிகளிலும் உற்சாகமாக காணப்பட்டவர், சாலையில் சுமார் 100 மீட்டர் தூரம் நடந்தே சென்று மக்களோடு கைகுலுக்கினார். ஒரு குழந்தையை கையில் வாங்கி கொஞ்சி மகிழ்ந்​தார். சிலருக்கு அவருடன் செல்ஃபி எடுத்துக் கொள்ளும் வாய்ப்பும் சிக்கியது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய மாவட்ட திமுக நிர்வாகி ஒருவர், “தேர்தல் பணிகள் தொடர்பாக முதல்வர் எங்களுக்கு சில அறிவுரைகளை வழங்கி​யுள்​ளார். இம்முறை கழகத்​தினரிடம் முதல்வர் நடந்து கொண்ட விதமே வித்தி​யாசமாக இருந்தது. 200 தொகுதி​களில் எப்படி​யா​யினும் வெல்ல வேண்டும் என தெரிவித்​திருக்​கிறார். அவரது அறிவுரைகள் எங்களுக்கு புதிய உற்சாகத்தை தந்துள்ளது. கடந்த தேர்தல்​களைப் போல் இல்லாமல் இம்முறை மாவட்​டத்தில் உள்ள 6 தொகுதி​களையும் திமுக கூட்டணி தான் வென்​றெடுக்கும் ​பாருங்​கள்” என்​றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x