Published : 31 Dec 2024 03:08 PM
Last Updated : 31 Dec 2024 03:08 PM
கன்னியாகுமரி: “திருவள்ளுவர் வெறும் சிலையல்ல. திருக்குறள் வெறும் நூல் அல்ல. நம்முடைய வாழ்க்கைக்கான வாளும், கேடயமும். அது நம்மைக் காக்கும், நம்மை அழிக்க வரும் தீமைகளை தடுக்கும். நம்மை மட்டுமல்ல, காவி சாயம் பூச நினைக்கிற தீய எண்ணங்களையும் விரட்டியடிக்கும்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும், திருக்குறள் தொடர்பான புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.31) கன்னியாகுமரியில் நடந்த திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில், திருக்குறள் ஓலைச்சுவடிகள், புத்தகங்கள், மின்நூல்கள் மற்றும் திருவள்ளுவர் சிலை பற்றிய புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்தார். திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா சிறப்பு மலரை வெளியிட்டு, திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா வளைவுக்கு அடிக்கல் நாட்டினார். திருக்குறள் சார்ந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுத் தொகை வழங்கினார்.
விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியது: “பொதுவாக, குடும்பங்களில் சாதாரணமாக,“உன் அப்பா என்ன வைத்துவிட்டு போனார்?” என்று கேட்பார்கள். என்னை கேட்டால், தமிழ்நாடு தொடங்குகின்ற இந்த குமரிமுனையில் வள்ளுவர் சிலையில் தொடங்கி, மறைந்த முதல்வர் கருணாநிதி செய்த சாதனைகளை சொல்லிக் கொண்டே போகலாம். இதையெல்லாம் தனிப்பட்ட ஸ்டாலினுக்காக செய்தாரா? இல்லை. அப்போது யாருக்காக செய்தார்? தமிழகத்துக்கும், தமிழுக்கும், தமிழினத்துக்கும் உருவாக்கிக் கொடுத்த சொத்துகள்தான் இதெல்லாம். என்னைப் பொறுத்தவரையில், அவர் வழியில் இந்த நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும், தமிழுக்கும் உழைப்பதுதான் என்னுடைய வாழ்நாள் கடமை.
திருவள்ளுவர் சிலை அமைத்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது என்று சொன்னவுடன், அதற்கு பெரிய விழா நடத்தவேண்டும் என்று நான் சொன்னேன். உடனே சில அதிமேதாவிகள், ஒரு சிலை அமைப்பதற்கு எதற்கு விழா நடத்தவேண்டும் என்று கேட்க தொடங்கினார்கள். அவர்கள் கேள்வியில் அர்த்தம் கிடையாது; ஆனால் உள்ளர்த்தம் உண்டு. அவர்களுக்கு ‘பதிலுக்குப் பதில்’ சொல்ல தேவையில்லை. ஆனால், உங்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது, திருவள்ளுவர், தமிழர்களுக்கு இருக்கக்கூடிய உலக அடையாளம். திருக்குறள் தமிழர்களின் பண்பாட்டு அடையாளம். அதனால் கொண்டாடுகிறோம், கொண்டாடுவோம், கொண்டாடிக் கொண்டே இருப்போம்.
மறைந்த முதல்வர் கருணாநிதியுடைய கனவுக்கு உரு கொடுத்த மாமனிதர்தான், கணபதி ஸ்தபதி. அவர்தான் வள்ளுவர் கோட்டத்தையும், பூம்புகார் கோட்டத்தையும், பாஞ்சாலங்குறிச்சி கோட்டையையும் அமைத்தார். அவருடைய அப்பாதான், சென்னையில் இருக்கின்ற காந்தி மண்டபத்தை அமைத்தவர்.இந்த கம்பீர வள்ளுவர் சிலைக்கு கருணாநிதி காரணகர்த்தா என்றால், சிற்பக் கலைஞர் கணபதி ஸ்தபதி தான் கலைக்கர்த்தா. இந்தச் சிலையை பற்றி சொல்லவேண்டும் என்றால், திருக்குறளின் அதிகாரங்களை குறிக்கின்ற வகையில், 133 அடி உயரம். அதில், அறத்துப்பால் அதிகாரங்களை குறிக்கின்ற வகையில், பீடம் 38 அடி. அறம் என்ற பீடத்தில் பொருளும்-இன்பமுமாக 95 அதிகாரங்கள் சிலையாக இருக்கிறது.
தலைமீது தூக்கி முடிந்திட்ட கொண்டையையே மகுடமாக கொண்டு, இடுப்பில் பட்டாடையையும், மார்பில் மேல் துண்டும், வலது கையானது அறம், பொருள், இன்பம் என்பதைக் காட்டும் மூன்று விரல்களாகவும், இடது கையில் குறள் ஓலைச் சுவடிகளும் இருப்பது போல அமைத்திருக்கிறார் கணபதி ஸ்தபதி .7000 டன் எடை கொண்ட இந்தச் சிலையில், 3,681 கற்கள் இருக்கிறது. இத்தனைக் கற்களைக் கொண்டு ஒரு சிலையை உருவாக்கலாம். ஆனால், அதை ஒரு பாறையில் தூக்கி நிறுத்தி வைத்திருப்பது தான் இந்தச் சிலையின் பெருமை.
133 அடிக்கு சிலை வைக்க, 180 அடிக்கு சாரம் கட்டி இதை அமைத்தார்கள். 500 சிற்பிகள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்கள். கணபதி ஸ்தபதி சொன்னார், தஞ்சைப் பேரரசன் ராஜராஜ சோழனிடம் அன்று கண்ட சிற்பக் கலை மரபை இன்று, ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக முதல்வர் கருணாநிதியிடத்தில் காண்கிறேன் என்று சொன்னார்.தஞ்சை பெரிய கோயில் வடிவமைத்த குஞ்சரமல்லனின் வம்சத்தைச் சேர்ந்தவர்தான் கணபதி ஸ்தபதி. சொற்சிற்பியாம் கருணாநிதியும், கல்சிற்பியாம் கணபதி ஸ்தபதியும் சேர்ந்து உலக வாழ்க்கைச் சிற்பியாம் வள்ளுவருக்காக உருவாக்கிய சிலைக்கு, நாம் வெள்ளிவிழா கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இந்த திருக்குறள் விழாவை முன்னிட்டு, சில அறிவிப்புகளையும் நான் வெளியிட விரும்புகிறேன்.
> சுற்றுலாப் பயணிகள் அனைவரும் திருவள்ளுவர் சிலையை சென்றடைய பயனடைவதற்காக படகு சவாரி வசதியை மேம்படுத்துவதற்காக 3 புதிய பயணிகள் படகுகள் வாங்கப்படும். முதல் படகுக்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரும், இரண்டாம் படகுக்கு மார்சல் நேசமணி பெயரும், மூன்றாம் படகுக்கு ஜி.யு.போப் பெயரும், என மூன்று பெயர்களும் அந்தப் படகுகளுக்கு சூட்டப்படும்.
> ஒவ்வொரு மாவட்டத்துக்கும் திருக்குறளில் ஆர்வமும், புலமையும் மிக்க ஆசிரியர்கள், பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்குப் பயிற்சி வழங்கி மாவட்டம்தோறும் தொடர் பயிலரங்குகள், பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். 'திருக்குறள் திருப்பணிகள்' தொடர்ந்து நடைபெற திட்டம் வகுக்கப்படும். இதற்காக, ஆண்டுக்கு மாவட்டம் ஒன்றுக்கு மூன்று லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
> ஆண்டுக்கு 133 உயர் கல்வி நிறுவனங்களில், திருக்குறள் தொடர்பான கலை இலக்கிய அறிவுசார் போட்டிகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்த திட்டமிடப்படும்.
> ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் கடைசி வாரம் 'குறள் வாரம்' கொண்டாடப்படும்.
> தமிழ்த் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான திருக்குறள் மாணவர் மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்படும்.
> திருக்குறளும், உரையும் அரசு அலுவலகங்களில் எழுதப்படுகிறது போல, தனியார் நிறுவனங்களிலும் எழுதுவதற்கு, ஊக்குவிக்க உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
இத்துடன் சேர்த்து, குமரிக்கு வந்து இந்த பகுதிக்கான அறிவிப்பு செய்யாமல் இருக்க முடியாது? தமிழகத்தின் தென்கோடியில் அமைந்திருப்பது மட்டுமில்லாமல் வள்ளுவர் சிலையால் சிறப்பு பெற்றிருக்கின்ற, சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்ற வகையில், கன்னியாகுமரி பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்படும். பேரறிஞர் சிலையாக இருக்கக்கூடிய வள்ளுவர் சிலையினை இந்த வெள்ளி விழாவில் நான் மறுபடியும் சொல்கிறேன்.
திருவள்ளுவர் வெறும் சிலையல்ல. திருக்குறள் வெறும் நூல் அல்ல. நம்முடைய வாழ்க்கைக்கான வாளும், கேடயமும். அது நம்மைக் காக்கும், நம்மை அழிக்க வரும் தீமைகளை தடுக்கும். நம்மை மட்டுமல்ல, காவி சாயம் பூச நினைக்கிற தீய எண்ணங்களையும் விரட்டியடிக்கும். தனி மனிதர் முதல் அரசு வரைக்கும் நீதி நெறி சொன்னவர் நம்முடைய வள்ளுவர். நாம் செய்ய வேண்டியது, பள்ளிகளில், கல்லூரிகளில், அரசு அலுவலகங்களில் திருக்குறளை இன்னும் இன்னும் அதிகமாக இடம்பெறச் செய்யவேண்டும். இது அரசுக்கான உத்தரவு மட்டுமல்ல, தனியார் நிறுவனங்களும் இதைப் பின்பற்றவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT