Published : 31 Dec 2024 12:39 PM
Last Updated : 31 Dec 2024 12:39 PM
புதுச்சேரி: புதுச்சேரி அரசு உயர்த்தி அறிவித்துள்ள பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி ஆட்டோக்களுக்கு, மலர் வளையம் வைத்து ஏஐடியூசி ஆட்டோ சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதுச்சேரி எல்லைப்பிள்ளைசாவடியில் உள்ள அரசு குழந்தைகள் மருத்துவமனை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஆட்டோ சங்க மாநில பொதுச்செயலர் சேது செல்வம், தலைவர் சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
போராட்டம் தொடர்பாக நிர்வாகிகள் கூறியதாவது: இந்தியாவில் எந்த மாநிலத்திலும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக அரசு பெட்ரோல் டீசல் விலையை தலா ரூ. 2 உயர்த்தி ஜனவரி 1 முதல் நடைமுறைப்படுத்துவதாக புத்தாண்டு பரிசாக அறிவித்துள்ளனர். இவ்விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்.
புதுச்சேரி மாநிலத்தில் சட்டத்துக்கு புறம்பாக ஆயிரக்கணக்கான இரு சக்கர வாகனங்களை வாடகைக்கு விட்டு வருகிறார்கள், இதனை தடுப்பதற்கு அரசு எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை, இதனால் ஆட்டோ தொழிலாளர்கள் வருமான இழப்பை சந்தித்து வருகிறார்கள், அதுமட்டுமின்றி இன்சூரன்ஸ் கட்டணம், சாலை வரி, எப்சி கட்டணம் செலுத்துகிறோம், ஆண்டுதோறும் எப்சி எடுப்பதற்கு ஆட்டோவை புதுப்பிப்பது என ஆண்டுக்கு ரூ. 40,000 ஆயிரம் வரை செலவு செய்து இந்த தொழிலை செய்து வருகிறார்கள், தற்பொழுது பெட்ரோலின் விலை 94 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இந்த நிலையில் திடீரென பெட்ரோல், டீசலுக்கு ஜனவரி 1 முதல் 2 ரூபாய் உயர்த்தப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு காரணமாக ஆட்டோ கட்டணத்தை உயர்த்தினால் பொதுமக்கள் ஆட்டோவை பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்வார்கள். இதனால், இத்தொழிலை நம்பி உள்ள ஆட்டோ தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.
ஆட்டோ ஆப் உருவாக்குவதாக போக்குவரத்துத்துறை தெரிவித்து, இன்று முதல் செயல்பாட்டுக்கு வரும் என்றனர். ஆனால், அதையும் அரசு செயல்படுத்தவில்லை. ஆட்டோ தொழிலை முடக்கி சமாதி கட்டி மலர்வளையம் வைக்கும் வேலையை அரசு செய்வதை உணர்த்தும் வகையில் ஆட்டோக்களுக்கு மலர் வளையம் வைத்து போராட்டம் நடத்தினோம் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT