Last Updated : 31 Dec, 2024 12:36 PM

 

Published : 31 Dec 2024 12:36 PM
Last Updated : 31 Dec 2024 12:36 PM

மேட்டூர் அணை இன்று மாலைக்குள் 120 அடியை எட்டும்: நீர்வளத் துறை அதிகாரிகள் தகவல்

மேட்டூர்: மேட்டூர் அணை நடப்பாண்டில் 3-வது முறையாக இன்று மாலைக்குள் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என நீர்வளத்துறை மண்டல தலைமை பொறியாளர் தயாளகுமார் தெரிவித்தார்.

காவிரி நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சீராக உயர்ந்து வந்தது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 2,516 கன அடியாகவும், நேற்று 2,331 கன அடியாகவும் இருந்த நிலையில் இன்று 2,875 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 500 கன அடி நீர், கால்வாய் பாசனத்துக்கு 300 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு விட, நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் 119.87 அடியில் இருந்து 119.97 அடியாகவும், நீர் இருப்பு 93.26 டிஎம்சியில் இருந்து 93.42 டிஎம்சியாகவும் உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து இருக்கும் பட்சத்தில் முழு கொள்ளளவான 120 அடியை இன்று மாலைக்குள் எட்டவுள்ளது.

மேட்டூர் அணை கடந்த ஜூலை 30-ம் தேதி 43வது முறையாக நிரம்பியது. பின்னர், நடப்பாண்டில் ஆகஸ்ட் 12-ம் தேதி 2வது முறையாக நிரம்பியது. தொடர்ந்து, நடப்பாண்டில் 3வது முறையாக மீண்டும் நிரம்பும் என்பதால் அணை பகுதிகளில் நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், நீர்வளத்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் தயாளகுமார், இன்று அணையில் ஆய்வு மேற்கொண்டார். அணையின் 16 கண் மதகு பகுதி, இடது கரை, வலது கரை, வெள்ள கட்டுப்பாட்டு மையம், சுரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார். அணை முழு கொள்ளவை எட்டும் போது, நீரை வெளியேற்றுவது குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர், நீர்வளத்துறை அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இந்த ஆய்வின் போது, சேலம் மேல் காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் சிவக்குமார், மேட்டூர் செயற்பொறியாளர் வெங்கடாசலம், உதவி செயற்பொறியாளர்கள் செல்வராஜ், மதுசூதனன், அணை பிரிவு உதவி பொறியாளர் சதிஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர், நீர்வளத்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் தயாளகுமார் கூறுகையில், மேட்டூர் அணையில் முழு கொள்ளளவான 120 அடி நீர் இருப்பதால் டெல்டா பாசனத்துக்கு தடையின்றி நீர் வழங்க முடியும். உபரி நீர் திட்டத்தில் ஏரிகளுக்கு நீர் வழங்குவது குறித்து தமிழக அரசு மற்றும் உயர் அதிகாரிகளிடம் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை இன்று மாலைக்குள் எட்டும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x