Published : 31 Dec 2024 11:56 AM
Last Updated : 31 Dec 2024 11:56 AM

ஆங்கிலப் புத்தாண்டு: ராமதாஸ், அன்புமணி, செல்வப்பெருந்தகை உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

சென்னை: 2025 ஆங்கிலப் புத்​தாண்டு கொண்​டாட்​டத்தை முன்னிட்டு பாமக நிறுவனர் ராமதாஸ், ஓபிஎஸ் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் கூறியிருப்பதாவது: ராமதாஸ்: மாற்றத்திற்கும், மகிழ்ச்சிக்கும் வழிவகுக்கக் கூடிய 2025 ஆம் ஆண்டை வரவேற்று கொண்டாடும் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒவ்வொரு புத்தாண்டும் எல்லையில்லாத நம்பிக்கைகளுடன் தான் பிறக்கின்றன... ஆனால், அந்த ஆண்டின் நிறைவு சோதனைகளுடன் தான் முடிகிறது. நம்பிக்கை தான் வாழ்க்கை. கடந்த சில ஆண்டுகளின் துயரங்கள் அனைத்தும் துடைத்தெறியப்படும்; அனைத்து துறைகளிலும் இதுவரை இல்லாத முன்னேற்றங்கள் எட்டப்படும் என்ற நம்பிக்கையுடன் புதிய ஆண்டை வரவேற்போம். புத்தாண்டு நமக்கு மகிழ்ச்சியை, மட்டற்ற மகிழ்ச்சியை மட்டுமே அளிக்கும்; ஏமாற்றங்களை முழுமையாக விரட்டியடிக்கும்.

2025 ஆம் ஆண்டு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை இரு குறள்களின் வாயிலாக விளக்க விரும்புகிறேன். திருக்குறளின் 551 ஆம் குறள்,‘‘கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு அல்லவை செய்தொழுகும் வேந்து’’ என்பதாகும். கொடுங்கோன்மை என்ற அதிகாரத்தில் வரும் இந்தக் குறளுக்கு கலைஞர் எழுதிய உரை,‘‘அறவழி மீறிக் குடிமக்களைத் துன்புறுத்தும் அரசு, கொலையைத் தொழிலாகக் கொண்டவரைவிடக் கொடியதாகும்’’ என்பதாகும். தமிழ்நாட்டில் இப்போது நிலவும் கொலைத் தொழில் ஆட்சி அகற்றப்படுவதற்கு 2025 ஆம் ஆண்டு வலிமையான அடித்தளம் அமைக்க வேண்டும்.

2026 ஆம் ஆண்டு.‘‘வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோனோக்கி வாழுங் குடி’’(குறள்:542. பொருள்: உயிர்கள் எல்லாம் மழையை எதிர்பார்த்தே வாழும்; மக்களோ மன்னரின் நேர்மையான ஆட்சியை எதிர்பார்த்தே வாழ்வர்) என்ற செங்கோன்மை அதிகாரத்தின் குறளைப் போன்ற ஆட்சி அமைய வேண்டும்.

நாம் எதிர்பார்ப்பது நிச்சயம் நடக்கும். 2025 ஆம் ஆண்டு நாம் எதிர்பார்த்ததைப் போலவே இனிப்பாக அமையும்.... அனைவருக்கும் அனைத்து நலன்களும், வளங்களும் கிடைக்கும்; பொருளாதாரம் வளரும்; மகிழ்ச்சி பெருகும்; அமைதியும், நிம்மதியும் கிடைக்கும்; அவற்றை சாதிக்க நாம் கடுமையாக உழைப்போம் என்று கூறி தமிழக மக்களுக்கு மீண்டும் ஒருமுறை புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புமணி ராமதாஸ்: சோர்ந்து கிடப்பவர்களுக்கு நம்பிக்கையையும், உறுதியையும் வழங்கும் ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பை கொண்டாடும் சொந்தங்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். புத்தாண்டு பிறப்பு என்பது ஆண்டுக்கு ஒரு முறை வழக்கமாக வந்து போகும் நிகழ்வல்ல. ஒவ்வொரு ஆண்டும் மனிதகுலத்தின் மனதில் புத்துணர்வையும், புது நம்பிக்கையையும் விதைப்பதற்கான உன்னத திருநாள் ஆங்கிலப் புத்தாண்டு ஆகும்.

ஓராண்டில் ஆயிரமாயிரம் ஏமாற்றங்கள், வருத்தங்கள், கவலைகள் இருந்தாலும், அவை அனைத்தையும் நாட்காட்டியுடன் சேர்த்து ஒதுக்கி வைத்து விட்டு, புதிதாக பிறக்கப் போகும் ஆண்டில் எத்தனை சவால்கள் வந்தாலும் அவற்றை துணிச்சலுடன் எதிர்த்து நின்று வீழ்த்தும் நம்பிக்கையையும், உத்வேகத்தையும் நமக்கு அளிப்பது புத்தாண்டு தான். அதை எவரும் மறுக்க முடியாது.

தமிழ்நாட்டு மக்களுக்கு 2024 ஆம் ஆண்டு பெரும் துயரமாக அமைந்தது. மழை, வெள்ளம், சட்டம் & ஒழுங்கு சீர்குலைவு, அடக்குமுறை என அனைத்து பாதிப்புகளாலும் தமிழ்நாட்டு மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில், அவற்றை சரி செய்ய வேண்டிய தமிழக அரசு, தனக்குத் தானே புகழ்மாலைச் சூடிக்கொண்டு மக்களைக் காக்காமல் துன்பப்படுத்தியதை கடந்த ஓராண்டாக நாம் கண்டோம். இதற்கு முடிவுரை எழுதி மக்கள் மகிழ்ச்சிக்கு வரவேற்புரை வழங்கும் ஆண்டாக 2025 ஆம் ஆண்டு அமைய வேண்டும்.

தமிழ்நாட்டின் நலன்கள், உரிமைகள் ஆகியவற்றின் மீது படிந்த இருள் விலகி, ஒளி பிறக்க ஆங்கிலப் புத்தாண்டு வகை செய்யட்டும். புத்தாண்டில் தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து நலன்களும், வளங்களும், மகிழ்ச்சி, வளர்ச்சி, அமைதி, மனநிறைவு, நல்லிணக்கம், சகோதரத்துவம் உள்ளிட்ட அனைத்தும் கிடைக்க வேண்டும் என்று கூறி, மீண்டும் ஒருமுறை ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஓபிஎஸ்: மலரும் ஆங்கிலப் புத்தாண்டை மலர்ச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் இந்த இனிய நாளில், தமிழக மக்கள் அனைவருக்கும் எனது ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மன மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

வன்முறை, பாலியல் பலாத்காரம், கொலை, கொள்ளை, கள்ளச் சாராயம், போதைப் பொருட்கள் நடமாட்டம் ஆகியவை ஒழிக்கப்பட்டு, அமைதி, வளம் வளர்ச்சி என்ற பாதையில் தமிழ்நாட்டைச் அழைத்துச் சென்று, தமிழ்நாடு இந்தியாவிற்கே முன்மாதிரியாக விளங்கிட வேண்டும் என்ற லட்சியத்தை அடைய நாம் அனைவரும் பாடுபட வேண்டும். அப்பொழுதுதான், அமைதியான சூழலில் வளமான வாழ்வு பெற்று அனைத்து மக்களும் முன்னேற்றம் காண முடியும்.

வருகின்ற புத்தாண்டு அனைத்து மக்களின் வாழ்க்கையை வளமாக்கும் ஆண்டாக, துன்பங்கள் கரைந்து இன்பங்கள் நிறையும் ஆண்டாக, தோல்விகள் தேய்ந்து வெற்றிகள் பெருகும் ஆண்டாக, தடைகளைத் தகர்த்தெறியும் ஆண்டாக, கனவுகள் நனவாகும் ஆண்டாக எல்லையில்லா மகிழ்ச்சியை தரும் ஆண்டாக, மாற்றத்தினை உருவாக்கும் ஆண்டாக மலரட்டும் என்ற என்னுடைய அவாவினைத் தெரிவித்து, அனைவருக்கும் என்னுடைய புத்தாண்டு நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்

கே.பாலகிருஷ்ணன் வாழ்த்து: பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும், சமூக பாரபட்சங்களும் இல்லாத ஒரு புதிய சமத்துவ சமூகம் மலர்வதற்கான ஓர் புதிய பாதையை அமைக்கவும் அதற்கு எதிரான அனைத்து தடைகளை தகர்க்கவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த புத்தாண்டில் சபதம் ஏற்போம். இருள் போல சூழும் சாதிய, மத மோதல்கள், பிற்போக்குத்தனமான பாலின பாகுபாடு, மூடநம்பிக்கைகள், சீரழியும் முதலாளித்துவத்தின் வெளிப்பாடான ஊழல் மற்றும் பெரும் கொள்ளை உள்ளிட்ட அனைத்து கேடுகளிலிருந்தும் சமூகத்தை விடுவித்து, மானுடம் போற்றும் உயர்வானதொரு சமூகத்தை கட்டி எழுப்புவதற்கான சமரசமற்ற போராட்டங்களை அரசியல் சமூக பொருளாதார தளங்களில் நடத்திக் கொண்டிருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இத்தகைய முயற்சிகளை புத்தாண்டிலும் வரும் காலங்களிலும் மேலும் முனைப்போடு தொடரும்.

கார்ப்பரேட் இந்துத்துவா கொள்கைகளை அமலாக்கி, மக்களைப் பிரிக்கும் பிளவுவாத அரசியலையும், கூட்டாட்சி மற்றும் மதச்சார்பின்மை உள்ளிட்ட விழுமியங்களை சிதைக்கும் ஏதேச்சாதிகார ஆட்சியையும் தோற்கடித்து நமது நாட்டின் பன்மைத்துவத்தை பாதுகாக்கும் போராட்டத்தை வலுப்படுத்துவோம் எனும் அறைகூவலை முன்வைப்பதோடு, அத்தகைய போராட்டத்தில் இணைந்திருக்கும் தொழிலாளர்கள், உழைப்பாளி மக்கள், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், முற்போக்காளர்கள், அறிவுத்துறையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

செல்வப்பெருந்தகை: பிறக்கப்போகிற 2025 ஆங்கில புத்தாண்டில் இந்தியாவில் ஜனநாயகம் தழைக்கவும், மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்கிற வகையிலும், மக்களவை எதிர்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் எடுத்து வருகின்ற முயற்சிகள் வெற்றி பெற வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இதன்மூலம் மக்களின் வாழ்வு ஏற்றம் பெற்று, ஒளிமயமான எதிர்காலம் அமைய அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x