Published : 31 Dec 2024 06:18 AM
Last Updated : 31 Dec 2024 06:18 AM

தெற்கு ரயில்வேயில் புதிய கால அட்டவணை நாளைமுதல் அமல்

சென்னை: தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணை நாளை (ஜன.1) வெளியாகவுள்ள நிலையில் புதிய ரயில்கள், ரயில்களின் சேவை நீட்டிப்பு, வேகம் அதிகரிப்பு உள்ளிட்ட சிறப்பம்சங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.

ரயில்வேயில் ஆண்டுதோறும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் விரைவு மற்றும் பயணிகள் ரயில்களுக்கான புதிய கால அட்டவணை வெளியிடப்படும். இந்நிலையில், 2024-ம் ஆண்டுக்கான ரயில்வே புதிய காலஅட்டவணை சில காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டு, 2025-ம் ஆண்டு ஜன.1-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தெற்கு ரயில்வே புதிய கால அட்டவணை நாளை (ஜன.1) வெளியாகவுள்ளது. இதில் புதிய ரயில்கள், ரயில்களின் சேவை நீட்டிப்பு, வேகம் உள்ளிட்ட சிறப்பம்சங்கள் இடம் பெற்றுள்ளன. அதன் விவரம் வருமாறு: ஆக.31-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட சென்னை எழும்பூர் - நாகர்கோவில் - சென்னை எழும்பூர் வந்தே பாரத் ரயில் (20627-20628), மார்ச்.12-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட மைசூர் - சென்னை சென்ட்ரல் - மைசூர் வந்தே பாரத் ரயில் (20663-20664) உள்பட 8 புதிய ரயில்கள் அறிமுகம் இடம்பெற்றுள்ளன.

கடந்த மே 2-ம் தேதி முதல் சென்னை கடற்கரை - வேலூர் கண்டோன்மென்ட் மெமு விரைவு ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு, ஜூலை 12-ம் தேதி முதல் சென்னை சென்ட்ரல் - சத்யா சாய் பிரசாந்தி நிலையம்- சென்னை சென்ட்ரல் வாராந்திர விரைவு ரயில் (12691-12692) ஷிவ்மொக்கா டவுண் வரை நீட்டிப்பு உள்பட 19 ரயில்கள் செல்லும் வழித்தடங்களில் நகரங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளன.

சென்னை சென்ட்ரல் - மைசூர் விரைவு ரயிலின் எண் (12609) மாற்றப்பட்டு புதிய எண் (16551) வழங்கப்பட்டுள்ளது. மைசூர் - சென்னை சென்ட்ரல் விரைவு ரயிலின் எண் (12610) மாற்றப்பட்டு, புதிய எண் (16552) வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர 14 ரயில்களின் எண்கள் மாற்றப்பட்டுள்ளன. 45 ரயில்களுக்கு சோதனை அடிப்படையில் கூடுதல் நிறுத்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கன்னியாகுமரி - நிஜாமுதீன் வாரம் இருமுறை விரைவு ரயில் (12641) உள்பட 56 அதிவிரைவு ரயில்களின் வேகம் 10 முதல் 85 கி.மீ. வரை அதிகரித்து இயக்கப்பட உள்ளது. இதுபோல 46 மெயில், விரைவு ரயில்களின் வேகமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x