Published : 31 Dec 2024 06:09 AM
Last Updated : 31 Dec 2024 06:09 AM
சென்னை: உயர் நீதிமன்ற வளாகத்தில் நிர்வாக பிரிவுக்கென 11 மாடிகள் கொண்ட புதிய அடுக்குமாடி கட்டிடத்தை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நேற்று திறந்து வைத்தனர். பாரம்பரிய கட்டிடத்தில் இயங்கி வரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அறைகளுக்கு இணையாக நிர்வாகப் பிரிவுடன் கூடிய பல்வேறு அலுவலகப் பிரிவும் தனித்தனி அறைகளில் இயங்கி வந்தன. இதனால் ஏற்பட்ட இடநெருக்கடியை கருத்தில்கொண்டு நிர்வாகப் பிரிவுக்கென புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, எஸ்பிளனேடு நுழைவுவாயில் பகுதியில் 11 அடுக்குமாடிகளுடன் கட்டப்பட்ட புதிய நிர்வாகப் பிரிவு கட்டிடத்தை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.மகாதேவன் ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர். அதன்பிறகு நடைபெற்ற விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் பேசிய உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், ‘‘நீதித்துறை தனது நீதிபரிபாலனத்தை விரைவாக வழங்கிட நிர்வாகத் துறையின் செயல்பாடுகள் அவசியமானது மட்டுமின்றி, முக்கியமானதும் கூட. நீதித்துறையின் முதுகெலும்பாக உள்ள நிர்வாகத் துறைக்கு போதிய இடவசதி இல்லாமல் இருந்து வந்த குறையை இந்த புதிய கட்டிடம் தீர்த்து வைத்துள்ளது.
இந்த புதிய கட்டிடத்தில் வழக்கு ஆவணங்களின் பாதுகாப்பு, நீதித்துறைக்கான கணக்கு வழக்கு அலுவலகங்கள், தபால் துறை உள்ளிட்ட நிர்வாகப் பிரிவு அலுவலகங்கள் இயங்கும். இந்த அடுக்குமாடி கட்டிடம் அமைவதற்கு உதவிய தமிழக அரசுக்கு நன்றி’’ என்றார். இந்நிகழ்வில் சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், ஆர்.சுப்பிரமணியன், ஆர்.சுரேஷ்குமார் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல் சுந்தரேசன், அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ் ராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.High Court
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT