Published : 31 Dec 2024 06:04 AM
Last Updated : 31 Dec 2024 06:04 AM

சென்னையில் பெண்களுக்கான கணினி, தையல் பயிற்சி பள்ளிகள் விரிவுபடுத்தப்படும்: மேயர் பிரியா

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில், பெண்களுக்கான கணினி பயிற்சி மற்றும் தையல் பயிற்சி பள்ளி திட்டம் அனைத்து மண்டலங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் மேயர் ஆர்.பிரியா அறிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில், துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜெ.குமரகுருபரன் ஆகியோர் முன்னிலையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதில் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மன்மோகன் சிங், முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் கவுன்சிலர்கள் சிவ.ராஜசேகரன், எம்.எஸ்.திரவியம் உள்ளிட்டோர் கருப்பு உடையில் வந்திருந்தனர். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தை கண்டித்து, அதிமுக கவுன்சிலர் கதிர் முருகன் கருப்பு பட்டை அணிந்து வந்திருந்தார்.

இக்கூட்டத்தில் காசிமேடு, முல்லை நகர், மூலக்கொத்தளம், கீழ்ப்பாக்கம், வேலங்காடு, கிருஷ்ணாம்பேட்டை, மயிலாப்பூர், கண்ணம்மா பேட்டை, பெசன்ட் நகர் உள்ளிட்ட மயானங்களை ரூ.10 கோடியில் சீரமைக்கவும், தற்காலிக மழலைக் கல்வி ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் ரூ.16,150, ஆயாக்களுக்கு ரூ.10,450 ஆக உயர்த்தி வழங்கவும் அனுமதி வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேசைகளை ரூ.5 கோடியில் டான்சியிடமிருந்து வாங்கவும், 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 100% தேர்ச்சி பெற்றுத் தந்த ஆசிரியர்களை ஊக்குவிக்க திருச்சி ஐஐஎம், என்ஐஇடி ஆகியவற்றுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லவும், 11-ம் வகுப்பு மாணவ, மாணவிகளை முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மற்றும் சிறந்த தொழிற்சாலைகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சிந்து சமவெளி நாகரிகத்தை வெளிப்படுத்திய சர் ஜான் ஹூபர்ட் மார்ஷலுக்கு எழும்பூர் அருங்காட்சியகத்தில் சிலை அமைக்க ஆட்சியருக்கு தடையின்மை சான்று வழங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பேரிடர் மேலாண்மை துறைக்கான மீட்பு மற்றும் நிவாரண மையக் கட்டிடம், புனித தோமையர் மலையில் ரூ.32.74 கோடியில் அமைக்க விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்கப்பட்டுள்ளது. அரசின் அனுமதி கோர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் நாய்களை இனக்கட்டுப்பாடு செய்ய ஏற்கெனவே 5 இடங்களில் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, ராயபுரம், அண்ணாநகர், அடையார் ஆகிய 5 மண்டலங்களில் தலா ஒரு நாய் இனக்கட்டுப்பாட்டு மையம் அமைக்கவும், அனுமதியின்றி நிறுவப்படும் இன்டர்நெட் சேவை நிறுவன கம்பம் ஒன்றுக்கு ரூ.1 லட்சம், அனுமதி பெற்ற எண்ணிக்கையை விட அதிகமாக நிறுவினால் ஒவ்வொரு கம்பத்துக்கும் தலா ரூ.75 ஆயிரம் அபராதம் விதிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருவிக நகர் மண்டலக் குழுத் தலைவர் சரிதா மகேஷ்குமார் பேசும்போது, ``அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் மாநகராட்சி சார்பில் கட்டணமில்லா கணினி பயிற்சி மற்றும் தையல் பயிற்சி பள்ளி திட்டம் தொடங்குவதற்கு முன் இனிவரும் காலங்களில் `முதல்வர் படைப்பகம்' என்ற திட்டத்தின் பெயரையே சூட்டவேண்டும்'' எனக் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதில் அளித்த மேயர் பிரியா, கொளத்தூர் தொகுதியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களின் வாழ்வாதாரம் உயர இலவச கணினி பயிற்சி, தையல் பயிற்சி பள்ளி ஆகிய திட்டங்களை தனது சொந்த செலவில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்துள்ளார். இதுபோன்ற பயிற்சி பள்ளிகள் துறைமுகம், சைதாப்பேட்டை தொகுதிகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் அனைத்து மண்டலங்களிலும் விரிவுபடுத்தப்படும்'' என்றார்.

கடற்கரையில் சவாரிக்கு பயன்படுத்தப்படும் குதிரைகளுக்கான தொழுவங்கள் சேப்பாக்கம், கலங்கரை விளக்கம், பெசன்ட் நகர் ஆகிய பகுதிகளில் உரிய இடங்களைக் கண்டறிந்து அமைக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் மொத்தம் 91 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்கள் ஜெயராமன், பிரியதர்ஷினி, சரஸ்வதி ஆகியோர், மக்கள் பிரச்சினை குறித்து பேச ஆணையரை சந்திக்கச் சென்றால், அவர் அவமதிப்பதாக மேயரிடம் புகார் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x